ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்வதில் அரசுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.திமுக அமைப்புச் செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி 15ம் தேதி, இளைஞரணி கூட்டத்தில் பேசும் போது, இப்போது தலித் மக்கள் கூட நீதிபதியாக முடிகிறது என்றால், அது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று குறிப்பிட்டார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. தலித் மக்கள் குறித்து அவதூறாக அவர் பேசி விட்டார் என்றும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவர் ஒரு விளக்கம் அளித்தார். தலித் மக்கள் மீது கொண்டுள்ள கரிசனத்தால் தான் பேசியதைத் திருத்திக் கூறுகிறார்கள் என்றும், அப்படிப் பேசியதற்கு மன்னிப்பு மற்றும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.எஸ் பாரதி மீது கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அவருக்கு செஷன்ஸ் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இந்த ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென்று தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டார். அதில், கொரோனாவை காரணம் காட்டி ஜாமீன் அளித்தது தவறு, அவருக்கு நோய்ப் பாதிப்பு இல்லை என்றும், கடும் நிபந்தனைகள் விதிக்காமல் ஜாமீன் விடுவித்ததை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இம்மனுவை நீதிபதி என்.சதீஷ்குமார், வீடியோ கான்பரன்சில் விசாரித்தார். அப்போது நீதிபதி, அரசு ஆற்ற வேண்டிய எத்தனையோ பணிகள் இருக்கும் போது, ஆர்.எஸ்.பாரதி ஜாமீனை ரத்து செய்வதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறது? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், விசாரணையை வரும் 19ம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.