லடாக்கில் நடந்த சீன தாக்குதலில் வீர மரணம் அடைந்த தமிழக வீரர் பழனியின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த 15ம் தேதி திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பிலும் ஆயுதங்கள் இல்லாமல் மோதிக் கொண்டனர். கற்கள், கம்பிகளால் அவர்கள் மோதிக் கொண்டதில் இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி (கர்னல்) ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக நேற்று காலையில் தகவல் வெளியாகியது. வீரமரணம் அடைந்த வீரர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி (40) என்பதும் தெரிய வந்தது.
வீர மரணம் அடைந்த பழனியின் உடல், மதுரைக்கு ராணுவ விமானம் மூலம் நேற்றிரவு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் அவரது உடலுக்கு மதுரை கலெக்டர், மாவட்ட எஸ்.பி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், பழனியின் உடல் ஆம்புலன்ஸ் வேனில் அவரது சொந்த ஊரான கடுக்கலூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்குப் பழனியின் உடலுக்கு ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ், எஸ்.பி. வருண்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும், அரசியல் பிரமுகர்கள், ஊர் மக்கள் ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர், ராணுவ வீரர்கள் அணிவகுத்து நின்று, 21 குண்டுகள் முழங்கப் பழனியின் சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.