சென்னை மற்றும் சுற்றிய மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு தொடங்கியுள்ளது. மதியம் 2 மணிக்குப் பிறகு கடைகளும் மூடப்பட்டதால், அனைத்து பகுதிகளிலும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை மற்றும் இதையொட்டிய மாவட்டங்களில் ஜூன் 19ம்தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
இதன்படி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்குக் காய்கறி, மளிகைக் கடைகள், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சந்தைகள் திறக்கப்பட்டன. எனினும், பல இடங்களில் மக்கள் கூட்டத்தைக் காண முடியவில்லை. சென்னையில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனங்கள் மட்டும் சென்றன. பாஸ் உள்ள மீடியா வாகனங்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். மதியம் 2 மணிக்குப் பிறகு கடைகள் அனைத்து அடைக்கப்பட்டு மாநகரமே வெறிச்சோடியது. போலீசாரும், மாநகராட்சியினரும் வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து, அறிவுரைகளை கூறிச் சென்றனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களிடம் எச்சரிக்கை செய்து அனுப்பினர். தேவையில்லாமல் சென்ற வாலிபர்களிடம் வாகனங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த முழு ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீடிக்கவுள்ளது. இதற்கிடையே, ஊரடங்கு காலத்தில் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் அரசை வலியுறுத்தியுள்ளனர். மேலும், நோய்த் தொற்று பாதிக்காத பகுதிகளிலும் மக்களுக்கு நிலவேம்பு, வைட்டமின் மாத்திரைகள், ஜின்ங் மாத்திரைகள் வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.