குஜராத், ராஜஸ்தான் உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 19 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், 9 இடங்களைப் பிடித்து விடலாம் என்று பாஜக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுக்கு லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மை உள்ளது. எனினும், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாததால், பாஜகவின் கொள்கைகளைத் திணிக்கும் சட்ட மசோதாக்களை நிறைவேற்றும் போது திணறி வருகிறது. அந்த சமயங்களில் பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி, அதிமுக உள்பட ஊழல் வழக்குகளில் சிக்கியுள்ள கட்சிகளைக் கடைசி நேரத்தில் வளைத்து ஆதரவு திரட்டி நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா உள்பட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 19 ராஜ்யசபா எம்.பி. பதவியிடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்தந்த மாநிலங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்கள், மாநில சட்டசபை வளாகங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தனர். மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பாதித்த எம்.எல்.ஏ., முழுக் கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார்.
இந்த தேர்தலில் அதிக இடங்களைப் பிடிப்பதற்காக மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கடந்த ஒரு மாதமாகப் பேரம் பேசி, அவர்களைப் பதவி விலகச் செய்வது உள்ளிட்ட வேலைகளில் பாஜக பட்டவர்த்தனமாக ஈடுபட்டது. இதை நீதித்துறை உள்பட எவரும் பொருட்படுத்தவில்லை.தற்போது 224 எம்.பி.க்கள் உள்ள ராஜ்யசபாவில் பாஜகவுக்கு 75 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இன்று நடைபெறும் தேர்தலில் பாஜகவுக்கு மேலும் 9 எம்.பி.க்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதன் மூலம் பாஜக பலம் 86 ஆக உயர்ந்தாலும், மெஜாரிட்டி இல்லாத நிலையே தொடரும்.