போலீஸ் லாக்கப்பில் தந்தை, மகன் மரணம்.. அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்..

M.K.Stalin condemns the lockup deaths in sathankulam police station.

by எஸ். எம். கணபதி, Jun 23, 2020, 13:38 PM IST

சாத்தான் குளத்தில் போலீஸ் லாக்கப்பில் தந்தையும், மகனும் மர்ம மரணம் அடையக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கொரோனா காலத்தில் மருத்துவமனையில் இருப்போர் இறப்பு அதிகமாகி வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் சிறையிலிருந்த இருவரது மரணம், அதிர்ச்சிக்குரியதாகவும் கண்டிக்கத்தக்கதாகவும் இருக்கிறது.


சாத்தான் குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் பென்னீக்ஸ், செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். ஊரடங்கு காலம் என்பதால் கடையடைப்பது தொடர்பாகக் கடந்த 19-ம் தேதி காவல்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் பென்னீக்ஸுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, காவலர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப் போட்டு, பென்னீக்சையும் அவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்துள்ளார்கள். இவர்கள் இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் 21-ம் தேதி அடைக்கப்பட்டார்கள். 22-ம் தேதி நெஞ்சுவலியால் மயங்கி விழுந்தார் என்று கோவில்பட்டி மருத்துவமனையில் பென்னீக்ஸ் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பென்னீக்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாகச் சொல்லி இருக்கிறார்கள். சிறிது நேரத்தில் ஜெயராஜும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரும் மர்மமான முறையில் இறந்து போயிருக்கிறார். கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்திருப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

காவல்துறையினரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லி, காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தையும் மகனும் காவலர்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள் என்றும், அதனால் தான் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து மரணம் அடைந்தார்கள் என்றும் அப்பகுதி மக்கள் சந்தேகப்படுகிறார்கள்; போராட்டம் நடத்தி வருகிறார்கள்.சிறையில் தந்தையும் தனயனும் உயிரிழந்ததற்கு நீதி கேட்டு, அவர்களது உறவினர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள், சாத்தான்குளம் காமராஜர் சிலை முன்பு, திருச்செந்தூர் - நாகர்கோவில் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டையே கொரோனா நோய்த் தொற்று பாதித்து பேரழிவை உருவாக்கி வரும் நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில், வாய்த்தகராறு காரணமாக, அநியாயமாக இரண்டு உயிர்களைக் கொடூரமாகப் பறிக்கும் அளவுக்கு நடந்து கொண்டது காவல்துறை என்றால், இது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சியா? திரைமறைவு போலீஸ் ஆட்சியா?
போலீஸ் லாக் அப்பில் இதுவரை நடந்த மர்ம மரணங்கள், இன்று நீதிமன்றக் காவல் என்று சொல்லப்படும் சிறைகளிலேயே பகிரங்கமாக நடக்கின்றன என்றால், இதற்கு உரியப் பதிலளிக்க வேண்டியது உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தானே?
மரணத்துக்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்; பறிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்! எப்போது கிடைக்கும் இந்நிகழ்வுக்குத் தீர்வு?
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading போலீஸ் லாக்கப்பில் தந்தை, மகன் மரணம்.. அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை