கோவில்பட்டி கிளைச் சிறையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட் தாமாக வழக்கு எடுத்து விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ் மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். கடந்த 20ம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக விசாரிப்பதற்காக பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் போலீஸார், காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன்னிலையில் அவரது தந்தை ஜெயராஜை போலீசார் அடித்துள்ளனர் இதைத் தட்டி கேட்டதால், பென்னிக்ஸையும் கட்டி வைத்து அடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். போலீசார் தாக்கியதில் பென்னிக்சுக்கு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அன்றிரவு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். மறுநாள் காலையில் ஜெயராஜுக்கும் திடீர் காய்ச்சல் ஏற்பட்டு அவரும் மரணமடைந்தார்.
போலீசாரின் தாக்குதலில் தான் இந்த இருவரும் கொல்லப்பட்டனர் என்று கூறி, சாத்தான்குளம் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், இந்த சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து சிறைத்துறை ஏடிஜிபியிடம் அறிக்கை கேட்டுள்ளது. இதற்கிடையே, சம்பவம் குறித்து உண்மை நிலையை அறிவதற்காகக் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக, ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி, சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூரியபிரகாசம், நீதிமன்றத்தில் ஆஜராகி இந்த கோரிக்கை விடுத்தார்.சாதாரண வழக்கில் கைதான தந்தை, மகன் ஆகிய இருவரையும், மாஜிஸ்திரேட் இயந்திரத்தனமாகக் காவலில் வைக்க உத்தரவிட்டதால் தான், இருவருக்கும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. எனவே, நீதித்துறையின் பங்கு குறித்தும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துத் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இது பற்றி நாளை முடிவெடுப்பதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறியுள்ளார்.