தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா.. முதல்வர் நாளை அறிவிப்பு..

Roads in Chennai a deserted look as the city observes complete lockdown.

by எஸ். எம். கணபதி, Jun 28, 2020, 14:36 PM IST

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கிறார்.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் இது வரை 78,335 பேருக்குப் பாதித்திருக்கிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தது.


தற்போது ஊரடங்கு வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், பஸ்,ரயில் போக்குவரத்து மற்றும் சினிமா தியேட்டர்கள், மால்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவை தவிர பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.எனினும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா அதிகமாகப் பரவி வருவதால், கடந்த 19-ம் தேதி முதல் வரும் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரை, திருவண்ணாமலை, வேலூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. ஏற்கனவே மேற்குவங்கம், ஜார்கண்ட், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளனர்.கொரோனா தடுப்பு பணி, ஊரடங்கை நீட்டிப்பது ஆகியவை குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை(ஜூன்29) ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும், ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு நாளை தகவல் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் முடிவு மற்றும் நிபுணர்களின் பரிந்துரை அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


தற்போது சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படாததால், அனேகமாக இந்த மாவட்டங்களில் குறைந்தது 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் மற்ற மாவட்டங்களில் கலெக்டர்கள் அறிவிப்பு வெளியிடக் கூடும் என்றும் பேச்சு அடிபடுகிறது. அதே போல், தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் திறப்பது தள்ளிப் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சென்னையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் கூட திறக்கப்படவில்லை. இதையடுத்து, சென்னை முழுவதும் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. பந்த் நாளில் கூட சில டீக்கடைகள் திறக்கப்பட்டிருக்கும். ஆனால், அது போன்ற கடைகள் கூட திறக்கப்படவில்லை. போலீசாரின் ரோந்து பணி மட்டுமே காணப்பட்டது.

You'r reading தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா.. முதல்வர் நாளை அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை