கொரோனாவை ஒழிக்க வாய்ச் சவடால் போதுமா.. எடப்பாடி மீது ஸ்டாலின் காட்டம்..

M.K.Stalin asked many questions to c.m. on corona control.

by எஸ். எம். கணபதி, Jun 28, 2020, 14:45 PM IST

கொரோனா விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குறைகளை அடுக்கி, ஸ்டாலின் காட்டமாக அறிக்கை விட்டுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ கான்பரன்சில் மக்களிடம் பேசியதாவது :கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

இந்தக் கொரோனா நோய்த்தொற்று ஒன்றிரண்டு பேருக்கு மட்டுமே பரவிய தொடக்க நிலையில் இருந்து, இன்றுவரை தமிழக அரசுக்கு, மக்களின் பாதுகாப்பு கருதி, நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை நான் வழங்கி வருகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும், மக்களைக் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது என்கிற கடமை உணர்ச்சியுடன் அனைத்து ஆலோசனைகளையும் சொல்லி வந்தேன். ஏராளமான மருத்துவர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் அரசுக்குச் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன்.

ஊரடங்கு காலம் என்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் செய்யவேண்டும் என்பதையும் சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன். ஆனால், இதில் எதையுமே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்கவுமில்லை; செய்யவுமில்லை.
'இவர் என்ன சொல்வது; நாம் என்ன கேட்பது?' என்று அலட்சியமாக இருந்தார். பாறையில் முட்டினால் தலைதான் வலிக்கும் என்பது மாதிரி ஆகிவிட்டது. இப்படி ஆணவமாக நடந்து கொண்டதால்தான் தினமும் 2000 - 2500- 3000 - 3500 என்று கூடிக்கொண்டு போகிறது. தினமும் 50 பேர் இறக்கிறார்கள்.

சமூகப் பரவல் ஆகிவிட்டது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் மருத்துவ நிபுணர் ஜேக்கப் ஜான் பேட்டியளித்துள்ளார். பல மருத்துவ நிபுணர்களும் சொல்கிறார்கள். ஆனால் சமூகப் பரவல் இல்லை என்று பிடிவாதமாகச் சொல்கிறார் முதலமைச்சர். வெறும் வார்த்தை விளையாட்டை வைத்து, மக்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள்!
என்னுடைய ஆலோசனை மட்டுமல்ல; யாருடைய ஆலோசனையையும் கேட்கின்ற மனநிலையில் முதலமைச்சர் இல்லை. அந்த முதிர்ச்சி இன்மையினால்தான், தமிழ்நாடு மிக மோசமான பேரழிவைச் சந்திக்க வேண்டியதாயிற்று. இந்த ஒட்டுமொத்த பேரழிவுக்கும் ஒரே ஒரு ஆள் காரணம் என்றால், அது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற உருப்படியாய் ஒரு நடவடிக்கையும் எடுக்காத எடப்பாடி பழனிசாமி, தனக்குப் பணம், கமிஷன் வருகிற திட்டங்களைப் பார்வையிடக் கோயம்புத்தூருக்கும் திருச்சிக்கும் போகிறார்!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கொரோனாவைக் கட்டுப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுவரைக்கும் எந்த ஆக்கப்பூர்வமான ஆலோசனையையாவது அரசாங்கத்துக்குச் சொல்லி இருக்கிறாரா?" என்று கேட்டிருக்கிறார்.

இது வரைக்கும் நான் விடுத்த அறிக்கைகளை ஒழுங்காகப் படித்திருந்தார் என்றால், இப்படிக் கேட்கின்ற அசட்டுத் துணிச்சல்கூட அவருக்கு வந்திருக்காது. என்னுடைய அறிக்கைகள் அனைத்துமே, அக்கறையுடன் அரசுக்கு ஆலோசனை சொல்லும் அறிக்கைகள்தான்.இதைச் செய்யுங்கள் - அதைச் செய்யுங்கள், கேரளாவைப் பாருங்கள் என்றுதான் நான் வழிகாட்டி இருக்கிறேன். இது எல்லாவற்றையும் மறைத்து, மூன்று மாதம் கழித்து ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார் என்று கேட்டால், என்ன அர்த்தம்?
அறிக்கைகளைப் படித்துவிட்டு, ஆலோசனைகளைச் செயல்படுத்த அவருக்கு மனசு இல்லை என்றுதான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், அடுத்தவர் ஆலோசனைச் சொன்னால் அதைப் புரிந்துகொள்ளக் கூட அவரால் முடியவில்லையென்று இப்போதுதான் தெரிகிறது.

கொரோனா நோய்த் தொற்று குறித்த செய்தி பரவியவுடனே, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் அதனால் சட்டமன்றக் கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னது யார்?
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துங்கள் என்று கேட்டது யார்?
கொரோனாவிற்கு 60 கோடி ரூபாய் நிதி போதாது, 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டது யார்?மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரியுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?பரிசோதனைகளை அதிகரியுங்கள் என்று எச்சரித்தது யார்?
ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவோருக்கு 5000 ரூபாய் நிதியுதவி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தது யார்?

மின் கட்டணத்தில் சலுகையும், கால நீட்டிப்பும் கொடுங்கள் என்று சொன்னது யார்?
நிதிநிலை அறிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள், சிறு-குறு நடுத்தர தொழில் நிறுவனங்களைக் காப்பாற்றுங்கள் என்றெல்லாம் ஆலோசனை வழங்கியது யார்?
கொரோனா காலத்தில் மதுபானக் கடைகளைத் திறக்காதீர்கள் என்று சொன்னது யார்?
பத்தாம் வகுப்புத் தேர்வை நடத்த வேண்டாம் என்று சொன்னது யார்?
இவ்வளவையும் சொன்னது நான்தானே.

நான் திரும்பத் திரும்பச் சொன்னது, ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால் முறையாக அமல்படுத்துங்கள் என்று சொல்லி வந்தேன். தளர்வு, தளர்வுக்கு மேல் தளர்வென்று ஊரடங்குச் சட்டத்தையே கேலிக்கூத்தாக ஆக்கினார். கோயம்பேடு ஒன்று போதாதா, எடப்பாடி பழனிசாமிக்கு எந்த முன்யோசனையும் இல்லை என்று சொல்வதற்கு?
சென்னையில் சில மண்டலங்களில் அதிகமாக நோய்ப் பரவி வருவதைப் பார்த்து, இந்த மண்டலங்களை மற்ற மண்டலங்களில் இருந்து தனியாகப் பிரித்து அரண் போல அமைத்துத் தடுங்கள் என்று நான் சொன்னேன். அந்த மண்டலத்து மக்கள் வெளியில் வரத் தேவையில்லாத அளவுக்கு, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுங்கள் என்று சொன்னேன்.

இதைச் செய்யாததால் தான் இன்றைக்குச் சென்னையின் ஆறு மண்டலங்கள் மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.மக்கள் மிக நெருக்கமாக வாழ்கிறார்கள் என்று மக்களைக் குறை சொன்னார் முதலமைச்சர்.இதைவிட அதிக நெருக்கமாக மக்கள் வாழ்வது மும்பையில் உள்ள தாராவி. இரண்டரை சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 5 லட்சம் மக்கள் வாழ்ந்த பகுதி அது. 3 லட்சத்து 60 ஆயிரம் பேருக்குச் சோதனை நடத்தி, தொடர்ந்து பரிசோதனைகள் செய்து, மருத்துவர்கள் கண்காணிப்பில் அந்தப் பகுதியையே மாற்றி, இன்றைக்குத் தொற்று குறைந்து விட்டது. இந்த மாதிரி செய்யுங்கள் என்றுதான் மே மாதமே சொன்னேன். கேட்கவில்லை.அவருக்குத் தெரிந்ததெல்லாம் டெண்டர், கமிஷன், கலெக்ஷன். அதைத்தவிர வேறு யோசனையே இல்லாமல் இருந்தார்.

கொரோனா வராது என்றார்!
வந்தால் காப்பாற்றிவிடுவோம் என்றார்!
பணக்காரர்களுக்குத்தான் வரும் என்றார்!
யாரும் பயப்பட வேண்டியது இல்லை என்றார்!
மூன்று நாளில் கொரோனா ஒழிந்துவிடும் என்றார்!
இப்போது மூன்று மாதமாக ஒழிக்க முடியவில்லை என்றதும், ஆண்டவனுக்குத்தான் தெரியும் என்று அகலமாகக் கையை விரித்துவிட்டார்.

ஏப்ரல் 16-ம் தேதி, கொரோனா மூன்று நாளில் ஒழிந்து விடும் என்று இவரே எப்படிச் சொன்னார்?வாய்க்கு வந்தபடி, சவடால் விடுவதுதான் அவரது வழக்கம். எதுவுமே நடக்கவில்லை என்றதும், 'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று கேட்க ஆரம்பித்திருக்கிறார்.காரணம் சொல்கிறவர், காரியம் செய்ய மாட்டார் என்று சொல்வார்கள். அப்படித்தான் பழனிசாமி தன்னுடைய இயலாமைக்கு ஏதாவது காரணம் தேடிக்கொண்டு இருக்கிறார். இவரால் எதுவுமே செய்ய முடியாது. கையாலாகாதவர் என்பதைத் தினமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்.

உங்களின் தனிச் செயலாளர் கொரோனா நோய்க்கு இறந்தாரே, நோய்ப் பாதுகாப்பு வழி முறைகளை நீங்கள் அவருக்குச் சொல்லிக் கொடுக்காதது தான் காரணமா?
சென்னையில் ஒரு இன்ஸ்பெக்டர் இறந்தாரே, அது உங்கள் தோல்வியா?
அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலருக்கும்- ஏன், உயர் கல்வித்துறை அமைச்சருக்கும் கொரோனா என்று செய்தி வந்ததே- அது உங்கள் தோல்வியா?
கொரோனா வீரர்களாகக் களத்தில் நிற்கும் 1500-க்கும் மேற்பட்ட காவலர்களும், 2000-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் - செவிலியர்களும், மக்கள் நல்வாழ்வுத்துறை ஊழியர்களும் கொரோனா நோய்த் தொற்றிற்கு உள்ளாகியிருக்கிறார்களே- அது உங்கள் நிர்வாகத் தோல்வியா? - என்று என்னாலும் கேட்க முடியும். அப்படிக் கேட்கும் அளவுக்கு உங்களைப் போல நாகரீகம் அற்றவனல்ல நான். கலைஞர் எங்களை அப்படி வளர்க்கவில்லை!
ஜூன் 15-ம் தேதி காணொலிக் காட்சி மூலமாக ஊடகவியலாளர்களைச் சந்தித்தேன். அப்போது முதலமைச்சருக்கு ஏராளமான ஆலோசனைகளைச் சொன்னேன். முடிவாக சில கேள்விகளையும் கேட்டேன்.

சமூகப் பரவல் இல்லை என்றால், தினமும் ஏன் தொற்று அதிகமாகி வருகிறது?
சென்னையில் பரவலைக் கட்டுப்படுத்த என்ன செயல்திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விசாரிக்க அமைத்துள்ள கமிட்டிகளின் அறிக்கைகள் எங்கே?எதிர்க்கட்சிகளோடு கலந்து பேச மறுப்பது ஏன்?பொருளாதாரத் திட்டங்கள் என்னென்ன? என்று கேட்டேன். எதற்குமே இதுவரை பதில் சொல்லவில்லை பழனிசாமி.ஏனென்றால் அவரிடம் பதில் கிடையாது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்!தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய படுகொலையை எடப்பாடி பழனிசாமி அரசு செய்துள்ளது. முதலில் 13 பேரைச் சுட்டே கொன்றது இந்த அரசு. இப்போது இரண்டு பேரை அடித்தே கொன்றிருக்கிறார்கள்.

இது மக்கள் மத்தியில், குறிப்பாக வணிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் எல்லாம் இருந்து திசை திருப்புவதற்காக தி.மு.க. மீது பழி போடுகிறார் பழனிசாமி!இந்தியாவிலேயே நோயை வைத்து அரசியல் செய்வது ஸ்டாலின் தான் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். நோயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் அடித்த பல்லாயிரம் கோடி கொள்ளையைச் சொல்லி எங்களால் அரசியல் நடத்த முடியும்.முதலமைச்சர் பதவியை வைத்து மக்களுக்கு எதையும் செய்யத் தகுதி இல்லாதவர் பழனிசாமி என்பதைத்தான் நாட்டு மக்களுக்குத் தினமும் சொல்லிக்கொண்டு வருகிறேன்.
இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு எல்லா ஆலோசனைகளையும் சொல்லிவிட்டேன். இப்போது அவருக்குச் சொல்வதற்கு ஒரே ஒரு ஆலோசனைதான் இருக்கிறது.
கொரோனாவை ஒழித்துவிட்டு அதற்கான சாதனைப் பட்டத்தைச் சூட்டிக் கொள்ளுங்கள். கொரோனேவே ஒழியாத நிலையில், ஒழித்து விட்டதாகப் பொய்யான மகுடம் சூட்டிக் கொள்ளாதீர்கள்!

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

You'r reading கொரோனாவை ஒழிக்க வாய்ச் சவடால் போதுமா.. எடப்பாடி மீது ஸ்டாலின் காட்டம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை