தமிழகத்தில் ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 82 ஆயிரம் தாண்டியது..

corona cases crossed 82,000 in tamilnadu.

by எஸ். எம். கணபதி, Jun 29, 2020, 09:55 AM IST

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை முடிகிறது. ஆனால், 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் தொடர்ந்து அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது.

இதற்குக் காரணமாக, நாட்டிலேயே அதிகபட்சமாகத் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவது தான் எனத் தமிழக அரசு கூறி வருகிறது. ஆனாலும் கொரோனா பரவுவது எந்த பகுதியிலும் குறைந்தபாடில்லை. சென்னையில் மட்டுமே சராசரியாகத் தினமும் 2000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இப்போது மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ளது.

தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்28) ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 79பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 82,279 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 1443 பேரையும் சேர்த்து 45,537 பேர் குணம் அடைந்துள்ளனர்.

சென்னையில் மட்டுமே நேற்று 1992 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 53,762 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் நேற்று 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 5051 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 99 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3524 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 99 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1794 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

மேலும், மதுரையில் நேற்று ஒரே நாளில் 284 பேருக்குத் தொற்று உறுதியானதால், அங்குப் பாதிப்பு 1995 ஆக அதிகரித்தது. இதே போல், திருவண்ணாமலை, வேலூர் உள்படப் பல மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தர்மபுரி, நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 54 பேர் பலியாயினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று வரை 1079 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை