சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு.. சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை.. முதல்வர் தகவல்..

Sathankulam father, son death case tobe hand over for CBI-inquiry.

by எஸ். எம். கணபதி, Jun 29, 2020, 10:12 AM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரிடம் போலீசார் கடையை அடைக்கச் சொல்லி கடுமையாகப் பேசியிருக்கிறார்கள். இதற்கு ஜெயராஜ் எதிர்ப்பு தெரிவித்துப் பேசவே, போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தகவலறிந்து ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் அங்கு ஓடி வந்தார்.அப்போது போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்துவிட்டனர்.

போலீசார் கடுமையாகத் தாக்கியதில் தந்தையும், மகனும் இறந்ததாகக் கூறி, அவர்களது உறவினர்கள், வியாபாரிகள் மற்றும் சாத்தான்குளம் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன்பின்பு, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மற்ற போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழகம் முழுவதும் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

ஜெயராஜ் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழக அரசு, அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தவிர, திமுக சார்பில் ரூ.25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவும் ரூ.25 லட்சம் கொடுத்துள்ளது.இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து, மதுரை ஐகோர்ட் கிளை, தாமாக வழக்கு எடுத்து விசாரித்தது. கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், சாத்தான்குளத்தில் தங்கி சாட்சிகளிடமும், கோவில்பட்டி சிறையிலும் நேரடியாக விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தலைவாசலில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சாத்தான்குளத்தில் செல்போன் கடையை மூடுவதில் ஏற்பட்ட பிரச்சனையில் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைத்தனர். அங்கு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளனர்.

இது பற்றி ஐகோர்ட் மதுரை கிளை விசாரித்து வருகிறது. இந்த சூழலில், இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணைக்கு வரும் போது இதைத் தெரிவித்து, சி.பி.ஐ.யிடம் வழக்கு ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை