கொரோனா பாதிப்பில் 2வது இடத்திற்கு வந்தது தமிழ்நாடு..

by எஸ். எம். கணபதி, Jun 30, 2020, 13:24 PM IST

நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழ்நாட்டில் 86,224 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் 90 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. தமிழகத்திலும் கொரோனா தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தினந்தோறும் 3 ஆயிரம் பேருக்குக் குறையாமல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவி வருகிறது.
இதற்குக் காரணமாக, நாட்டிலேயே அதிகபட்சமாகத் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதுதான் எனத் தமிழக அரசு கூறி வருகிறது. ஆனாலும் கொரோனா பரவுவது எந்த பகுதியிலும் குறைந்தபாடில்லை.
தமிழகம் முழுவதும் நேற்று(ஜூன்29) ஒரே நாளில் 3841 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 108 பேரும் அடக்கம்.
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 86,224 ஆக அதிகரித்துள்ளது. இதில், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2212 பேரையும் சேர்த்து 47,749 பேர் குணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் மட்டுமே நேற்று 2162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 55,969 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் நேற்று 187 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 5242 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 154 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 3656 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 28 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 1876 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.
மேலும், மதுரையில் நேற்று ஒரே நாளில் 290 பேருக்குத் தொற்று உறுதியானதால், அங்குப் பாதிப்பு 12302 ஆக அதிகரித்தது. இதே போல், திருவண்ணாமலை, வேலூர் உள்படப் பல மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தர்மபுரி, நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மட்டுமே நூற்றுக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 62 பேர் பலியாயினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று வரை 1141 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் ஐந்தரை லட்சம் பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்து 64,626 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இது வரை 2வது இடத்தில் டெல்லி இருந்தது. ஆனால், தற்போது டெல்லியை முந்தி 2வது இடத்தை தமிழ்நாடு பிடித்திருக்கிறது. டெல்லியில் 85,000 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.


More Tamilnadu News