சாத்தான்குளம் போலீஸ் மீது எப்.ஐ.ஆர். பதிய முகாந்திரம்.. ஐகோர்ட் கிளை கருத்து..

by எஸ். எம். கணபதி, Jun 30, 2020, 13:28 PM IST

ஜெயராஜ், பென்னிக்ஸ் உடல்களில் காயம் இருப்பது பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதால், சாத்தான்குளம் போலீசார் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என ஐகோர்ட் கருத்து கூறியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அவர்களும் மறுநாளே மர்மமான முறையில் இறந்தனர். போலீஸ் நிலையத்தில் இருவரையும் போலீசார் கொடூரமாக அடித்து துன்புறுத்தியதால்தான் அவர்கள் மரணம் அடைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 ஏட்டுகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் உள்ள அனைத்து காவலர்களும் மாற்றப்பட்டுள்ளனர். இந்த சூழலில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்திற்குச் சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மாஜிஸ்திரேட் சென்றார். அப்போது போலீஸ் நிலையத்தில் தந்தை மகன் வழக்கு தொடர்பான சில ஆவணங்களை, தூத்துக்குடி கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் கேட்டார். ஆனால், காவல் நிலையத்தில் உள்ளவர்கள் அவற்றைத் தர மறுத்துள்ளனர். மேலும், மாஜிஸ்திரேட் விசாரித்துக் கொண்டிருந்த போது மகாராஜன் என்ற காவலர் அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதன்பின், மாஜிஸ்திரேட் விசாரணை குறித்த தனது அறிக்கையை மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோரின் நடத்தைகளைக் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக, மகாராஜன் தன்னை உன்னால் ஒன்றும் புடுங்க முடியாதுடா என்று இழிவாகப் பேசியதாகவே குறிப்பிட்டுள்ளார்.இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதில், ஏஎஸ்பி குமார் உள்ளிட்ட காவல் துறையினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து, அவர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டனர். இதன்படி, ஏ.எஸ்.பி. குமார், டி.எஸ்.பி. பிரதாபன், போலீஸ்காரர் மகாராஜன் ஆகியோர் இன்று காலையில் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகினர். நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபினவ் ஆஜரானார்.அவர்களிடம் விளக்கம் கேட்ட நீதிபதிகள் பின்னர் கூறுகையில், “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உடலில் அதிக காயங்கள் இருந்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. எனவே, போலீசார் மீது வழக்குப் பதிவு செய்யும் முகாந்திரம் உள்ளது என்று தெரிவித்தனர்.


More Tamilnadu News