சாத்தான்குளம் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. கைது.. சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிரடி..

sathankulam incident police Inspector, S.I. arrested.

by எஸ். எம். கணபதி, Jul 2, 2020, 10:20 AM IST

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ். கடந்த 19ம் தேதி இரவு ஊரடங்கு நேரத்தையும் தாண்டி, ஜெயராஜ் கடையைத் திறந்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரைக் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.

அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, இரவு முழுக்க கொடூரமாகத் தாக்கியதால்தான் இருவரும் இறந்தனர் என்று குற்றம்சாட்டி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காவலர்கள் முதல் எஸ்.பி. வரை அனைவரும் பணிமாற்றம் செய்யப்பட்டனர். மதுரை ஐகோர்ட் கிளை தாமாக வழக்கு எடுத்து, விசாரித்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவின்படி சாத்தான்குளம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதில், தம்மை இழிவுபடுத்தும் வகையில் காவலர் மகாராஜன் பேசியதையும், ஏஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் தன்னை மிரட்டும் தோணியில் நடந்து கொண்டதையும் குறிப்பிட்டிருந்தார்.

இதை ஐகோர்ட் நீதிபதிகள் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொண்டு, அந்த காவல் துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கு எடுத்து நோட்டீஸ் கொடுத்தனர். மேலும், பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தலைமைக் காவலர் ரேவதி வாக்குமூலம் ஆகியவற்றைப் பார்க்கும் போது, இருவர் மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்ற அடிப்படை ஆதாரம் உள்ளது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், கொலை வழக்காக மாற்றாமல் அரசு ஏன் தயங்குகிறது? காவல்துறை பின்புலத்தில் அரசியல் அழுத்தம் உள்ளதா என்ற பேச்சுகள் வரத் தொடங்கின.
இதைத் தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கைக் கொலை வழக்காக மாற்றினர். பின்னர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

முதலில் ரகுகணேஷ் மட்டும் கைது செய்யப்பட்டு, அவரை நேற்றிரவு தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். பின்னர், மாஜிஸ்திரேட் உத்தரவுப்படி, ரகுகணேசை தூத்துக்குடி மாவட்டச் சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து, மற்றவர்களிடமும் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்பு, அவர்களை இன்று(ஜூலை 2) அதிகாலையில் அவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர்,காவல் நிலையத்திலிருந்த தடயங்களை அழிக்க முயற்சித்ததாகவும், குற்றத்தை மறைக்க முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அதனால், அவரையும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்து, கங்கைகொண்டான் சென்று கொண்டிருந்த அவரை அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர், அவரையும் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதற்கிடையே, சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கையை வரவேற்று சாத்தான்குளம் வியாபாரிகள் பட்டாசு வெடித்தனர்.

You'r reading சாத்தான்குளம் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. கைது.. சி.பி.சி.ஐ.டி. காவல்துறை அதிரடி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை