Wednesday, Jun 23, 2021

வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு..

Devotees should keep restrictions strictly in worship places.

by எஸ். எம். கணபதி Jul 3, 2020, 09:59 AM IST

கோயில், சர்ச், மசூதி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றத் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதில் ஒன்றாக, கிராமப்புறங்களில் சில கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டுத் தலங்களைத் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், பல இடங்களில் கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்றவில்லை எனப் புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
கோயில் வாசல்களில் வெப்பநிலை பரிசோதனை செய்வதுடன், தரமான கிருமி நாசினியைப் பக்தர்களுக்குக் கொடுத்து கைகளைச் சுத்தம் செய்து, கால்களை கழுவிய பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து வருபவர்கள், இடைவெளியைப் பின்பற்றாதவர்கள், முகக்கவசம் அணியாதவர்கள் ஆகியோரை அனுமதிக்கக் கூடாது.

மேலும், அங்கப்பிரதட்சணம், பிரசாதங்கள் வழங்குவது, தேங்காய், பழம், பூ கொண்டு வருதல், . விபூதி கையில் படும் வகையில் வழங்குவது, கைகுலுக்குதல் போன்ற உடல்ரீதியான எந்த தொடர்புகளையும் தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்று குறித்து துண்டுப் பிரசுரங்கள் அளிக்க வேண்டும்.அதேபோல் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இருதய நோயாளிகள், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் வருவதைத் தவிர்க்க வேண்டும்.
கோயிலுக்குள் சமூக இடைவெளியைப் பராமரிக்கத் தரையில் வட்டங்கள் வரைய வேண்டும். உள்ளே, வெளியே செல்லும் வாசல்கள் தவிர மீதம் உள்ளவற்றை மூட வேண்டும். கோயில் தரைப்பகுதியைத் தினசரி பல முறை தூய்மை செய்ய வேண்டும். 50 நபர்களுக்கு மேல் அனுமதிக்காமல் திருமணங்களை நடத்த வேண்டும்.

இதே போல், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் ஒவ்வொருவருக்கு இடையே 2 மீட்டர் இடைவெளி விட்டு, ஆலய வழிபாட்டில் பங்கேற்க வேண்டும். 100 சதுர மீட்டர் அல்லது 1,075 சதுர அடி பரப்பளவில் 20 பேருக்கு மேல் இருக்கக் கூடாது. ஆலயங்களுக்கு வருவோருக்கு பூ போன்ற பொருட்களை வழங்கக் கூடாது. ஆலயமணி மற்றும் வேறு பொருட்களைப் பக்தர்கள் யாரும் தொடக்கூடாது. வழிபாட்டு முறை, துதிப்பாடல்கள் ஆகியவற்றுக்கான புத்தகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பாடகர் குழு பாடல்களைத் தவிர்த்து, அதற்குப் பதிலாகப் பதிவு செய்யப்பட்ட இசை, பாடல்களை ஒலிபரப்பலாம்.

நற்கருணை, புனித நீர் தெளிப்பு போன்ற உடலைத் தொடக்கூடிய அனைத்து மத வழிபாட்டு முறைகளும் தவிர்க்கப்பட வேண்டும். ஆலய வளாகத்தில் திருமணம் நடந்தால் அதில் 50 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது. பங்கேற்போர், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.வழிபாடுகள் முடிந்த பிறகு ஆலய வளாகத்தில் பக்தர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும். இதே போன்று, மசூதிகளில் நெருக்கமாக நின்று பிரார்த்தனை செய்யக் கூடாது. சமூக இடைவெளியுடன் பிரார்த்தனை செய்தவர்க்கு ஏற்ப தொழுகை கூடங்களில் பெயிண்ட் மூலம் வட்டம் அல்லது சதுரம் அல்லது வரிசை கோடுகள் போடப்பட வேண்டும். மசூதிகளில் கூட்டங்கள் நடத்துவது, மதராசாக்கள் அல்லது ஆன்மிக வகுப்புகள் நடத்துவது கூடாது. மசூதிகளில் கூட்டமாக அமர்ந்து புனித நூல்களைப் படிப்பது, குழுக்களாக அமர்ந்து விவாதம் செய்வது போன்றவற்றை அனுமதிக்கக் கூடாது.

தர்காக்களில் புனித பீடம் இருக்கும் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். தர்காவில் உள்ள புனித பீடத்திற்கு அலங்கார துணிகள் மற்றும் மலர் போர்வைகள், பூக்கள் போன்றவற்றைக் காணிக்கையாகச் செலுத்த அனுமதிக்கக் கூடாது. தர்கா வளாகத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் போன்ற பகுதிகளில் 1 சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைடு கரைசல் தெளிக்கப்பட வேண்டும். இதை ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை செய்ய வேண்டும்.இதேபோன்று சீக்கியர்களின் குருத்துவாராக்கள், புத்த விஹார், சமணர்கள் மற்றும் பார்சி மத இடங்கள், ஜெயின் வழிபாட்டுத் தலங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

You'r reading வழிபாட்டுத் தலங்களில் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற தமிழக அரசு உத்தரவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை