தமிழகத்தில் இது வரை கொரோனா வைரஸ் நோய்க்கு 1321 பேர் பலியாகி விட்டனர். தற்போது மருத்துவமனைகளில் 41,047 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்ப் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தொற்று எண்ணிக்கை, இப்போது 4 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மதுரை மாவட்டங்களில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
சென்னையில் மட்டுமே சராசரியாகத் தினமும் 2000 பேருக்கு மேல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று(ஜூலை2) ஒரே நாளில் 4343 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 73 பேரும் அடக்கம்.தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 98,392 ஆக அதிகரித்துள்ளது. இதில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 3095 பேரையும் சேர்த்து 56,021 பேர் குணம் அடைந்துள்ளனர்.
சென்னையில் மட்டுமே நேற்று 2027 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 62,578 ஆக அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டில் நேற்று 171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்துப் பாதிப்பு எண்ணிக்கை 5807 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் நேற்று 164 பேருக்குத் தொற்று உறுதியான நிலையில் மொத்தம் 4167 பேருக்கும், காஞ்சிபுரத்தில் நேற்று 112 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து அம்மாவட்டத்தில் 2151 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.
மேலும், மதுரையில் நேற்று ஒரே நாளில் 273 பேருக்குத் தொற்று உறுதியானதால், அங்குப் பாதிப்பு 3133 ஆக அதிகரித்தது. இதே போல், திருவண்ணாமலையில் இது வரை 2029 பேருக்கும், கடலூரில் 1100 பேருக்கும், வேலூரில் 1521 பேருக்கும் விழுப்புரத்தில் 984 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. தற்போது, தர்மபுரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் மட்டுமே நூற்றுக்குக் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் பரவல் அதிகமாகி வருகிறது. அதே சமயம், குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், தற்போது 41,047 பேர் மட்டுமே கொரோனா சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழகத்தில் நேற்று கொரோனா நோயாளிகள் 57 பேர் பலியாயினர். இதையடுத்து, பலி எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று வரை 1321 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.