வெளிநாடு வாழ் தமிழர்கள் திரும்பி வர நடவடிக்கை.. முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..

வெளிநாடு வாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து, அவர்கள் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பினால் வெளிநாடுகளில் வாழும் இலட்சக்கணக்கான தமிழர்கள் பரிதவிப்பில் உள்ளனர். பலருக்கு வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தாயகம் திரும்ப விரும்பி, இந்தியத் தூதரகங்களிடம் முறையிட்டனர்.

இதனையடுத்து, 'வந்தே பாரத' திட்டத்தின் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு, வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் திரும்ப அழைத்து வரப்படுகின்றனர்.கேரளா தனது மாநிலத்தைச் சேர்ந்தோர் வெளிநாடுகளிலிருந்து திரும்புவதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து மேற்கொண்டு சிறப்பாக அதனை நிறைவேற்றியுள்ளது. பயணம், பாதுகாப்பு, பரிசோதனை, தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்தையும் சர்வதேசத் தரத்தில் கேரள அரசு மேற்கொண்டதை மத்திய அமைச்சகமும் பாராட்டியுள்ளது.

அதேநேரத்தில், வெளிநாடுகளில் வாழும் தமிழகத்தைச் சேர்ந்த பலரும் தாயகம் திரும்புவதற்காகக் காத்திருக்கும் நிலையில், அவர்களைத் திரும்ப அழைப்பதற்கான முயற்சிகளில் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு அக்கறை காட்டவில்லை என்று வெளிநாட்டுத் தமிழர்கள் காணொலி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.இதுகுறித்து வெளிநாடு வாழ் தமிழர்களுடன் காணொலி வாயிலான சந்திப்பில் நானும் கேட்டறிந்து, கேரள அரசைப் போல ஒரு இணையதளத்தை உருவாக்கி, பதிவு செய்திட வலியுறுத்தினேன்.

அதன்பிறகே, nonresidenttamil.org என்ற இணையதளத்தைப் பெயரளவுக்குத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், அதனையும் முறையாகச் செயல்படுத்தவில்லை.
'வந்தே பாரத' திட்டத்திலும் தமிழகத்திற்கு போதுமான விமானச் சேவைகள் நடைபெறவில்லை. இதுகுறித்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, அயல்நாடுகளில் பரிதவிக்கும் தமிழர்களை அழைத்துவர வேண்டும் எனக் கோரப்பட்டது.இதன் விசாரணையில், தமிழகத்தில் விமானம் தரையிறங்கத் தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என மத்திய அரசு ஜூன் 30ம் தேதி, நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஜூலை 2 அன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தாக்கல் செய்த ஆவணங்களின் வாயிலாக, 10 மடங்கு அதிக கட்டணமும் தனிமைப்படுத்தலுக்கான ஓட்டல் கட்டணமும் உள்ளடக்கிய சார்ட்டர்டு விமானங்களில் வரும் பயணிகளை மட்டுமே தமிழக அரசு அனுமதிக்கிறது என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார்.

அதுமட்டுமின்றி, வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பலர் ஒருவேளை உணவோ அல்லது அதற்கும் வழியின்றியே வீதிகளில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். மத்திய அரசின் அறிக்கையின்படியே, 27,956 தமிழர்கள் வெளிநாட்டில் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்கள் தங்களை மீட்கும்படி தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துவருகிறார்கள் என்பதையும் எடுத்துரைத்தார்.வாதங்களைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களைத் தாயகம் அழைத்து வருவதற்கான சாதகமான திட்டத்துடன், வரும் திங்களன்று பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் வேலை பார்ப்போரும் தமிழர்கள்தான்! பேரிடர் சூழலில் வேலையும் பாதிக்கப்பட்டு அவர்கள் பரிதவிப்பதால், அவர்களின் குடும்பத்தார் இங்கே பரிதவிக்கிறார்கள். இருதரப்பின் நிலையையும் உணர்வையும் புரிந்துகொள்ளக்கூடிய சூழலில் மத்திய அரசும், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசும் இல்லையோ எனச் சந்தேகம் எழுகிறது.வளைகுடா நாடுகள், கிழக்காசிய நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்டவற்றில் உள்ள தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கான விமானச் சேவைகளை இயக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவேண்டிய அ.தி.மு.க. அரசு, கிடைக்கின்ற வாய்ப்புகளையும் தவிர்ப்பது சரியான அணுகுமுறையல்ல!மிகக்குறைந்த அளவே தமிழகத்திற்கு விமானச் சேவை இயக்கப்படுகிற நிலையில், அதில் தாயகம் திரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களிடம் கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலுக்காக அதிக தொகை வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்நியச் செலாவணி ஈட்டித்தந்த அவர்கள் இப்போது நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்பும்போது, அவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை உள்ளிட்டவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்வதுதான் சரியாக இருக்கும். இனியும் இதுபோன்று அலட்சியம் காட்டாமல், வெளிநாடு வாழ் தமிழர்களின் நிலையினைப் புரிந்து தமிழக அரசு செயல்பட வேண்டும்.

வெளிநாடுகளில் வாழும் மலையாளம் பேசும் மக்களுக்காகக் கேரள மாநில அரசு ஒரு தனித்துறையை உருவாக்கி, அவர்களின் நலன் காப்பதில் முன்னணியில் இருக்கிறது. தி.மு.க., கடந்த தேர்தல் அறிக்கையிலேயே வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு எனத் தனியாக ஒரு துறை உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கியிருந்தது. வெகு விரைவில் தி.மு.க அரசு அமையும்போது அத்தகைய துறை உருவாக்கப்பட்டு, அயலகத் தமிழர் நலன் முழுமையாகக் காக்கப்படும். உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் நலனுக்காக ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை எப்போதும் கழகம் மேற்கொண்டு, அவர்களுக்கு எந்நாளும் துணை நிற்கும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds