பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் வெளியே வரவிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகவும், அதிமுகவில் பல்வேறு கருத்துகளும், யூகங்களும் உலா வருகின்றன.ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அவரது உடன் பிறவா சகோதரி சசிகலா, தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார். சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது.
இதன்பின், ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பதவி விலகினார். மறுநாள் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராகத் தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பத்து, பன்னிரெண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்தனர். அவர்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர்.
திடீர் திருப்பமாக சசிகலாவுக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனாலும், சசிகலா அசரவில்லை. அவர் தனக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்தார். அதைக் கூவத்தூரிலிருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றனர். முதல்வரான எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் காலில் விழுந்து வணங்கிய காட்சி, தற்போதும் வாட்ஸ்அப்பில் உலா வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது சசிகலாவுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் தண்டனை குறைப்பு செய்தால், அவர் ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று செய்திகள் வருகின்றன. தண்டனைக் குறைப்பு இல்லாவிட்டாலும் அவர் டிசம்பருக்குள் வெளியே வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சசிகலா வந்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் பெரும்பகுதி அவரிடம் சென்று விடும் என்று பேசப்படுகிறது. ஆனால், இதை அதிமுக நிர்வாகிகள் வெளியே மறுத்து வந்தாலும் எடப்பாடி பழனிசாமி இது வரை சசிகலா பெயரைக் குறிப்பிட்டு, இது வரை ஒரு வார்த்தை கூட பேசாதது கட்சியினரிடையே பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால்தான், சசிகலா வந்தால் அதிமுக மீண்டும் உடையுமா என்ற யூகங்கள் வெளியாகின்றன.
இதற்கிடையே, சசிகலாவின் தீவிர ஆதரவாளர் எனச் சொல்லப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று நாகப்பட்டினத்தில் ஒரு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், சசிகலா விடுதலைக்குப் பிறகு யார் அதிமுகவை வழிநடத்துவார்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்தார். அவர் கூறுகையில், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அதிமுகவை யார் வழி நடத்துவது என்பதைக் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரணமான மாவட்டச் செயலாளர். இதில் எந்த கருத்து கூறமுடியாது” என்று தெரிவித்தார்.
இதன்பிறகு, சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அவரிடம் இது பற்றிக் கேட்டதற்கு, ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. அதிமுகவைப் பொறுத்தவரை நேற்று, இன்று, நாளை என எப்போதுமே ஒரு நிலைப்பாடுதான். சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் இல்லாமல் கட்சியையும், ஆட்சியையும் நடத்துவது என்பதுதான் என்று கூறினார். அமைச்சர் ஜெயக்குமார்தான் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் என்றும் அவர் சொல்வதே அதிமுக தலைமையின் முடிவு என்றும் சில நிர்வாகிகள் கூறுகின்றனர்.
அதே சமயம், முதல்வரை எடப்பாடியார் என்று போற்றிப் புகழ்ந்து அவருக்கு நெருக்கமாக இருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே, சசிகலாவைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தீவிரமாக ஆதரித்தே பேசுகிறார். சசிகலா வேகமாக வெளியே வர வேண்டுமென்பதே அதிமுகவினரின் ஆசை என்று அவர் கூறியிருக்கிறார். அப்படி சசிகலாவைத் தீவிரமாக ஆதரித்துப் பேசிய அவருக்குச் சமீபத்தில் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னாலும் சரி. சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரிடையாக சொல்லும் வரை கட்சிக்குள் சசிகலாவின் வருகை பற்றிய செய்திகள், சர்ச்சைகள் ஓயவே ஓயாது. தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாட்டை அறியாதவரைச் சந்தேகத்தில்தான் இருப்பார்கள். அவ்வளவு ஏன்? அமைச்சர்களே குழப்பமாக இருப்பதால், இந்த விஷயத்தில் வெளிப்படையாக ஓங்கிப் பேசுவதற்குப் பயப்படுகிறார்கள்.