கொரோனாவா, கோடம்பாக்கம் அரசியலா - சினிமாவும் , தமிழக அரசும்...!

Corona, Kodambakkam Politics - Cinema and the Government of Tamil Nadu ...!

by Chandru, Jul 10, 2020, 16:25 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய் , தல அஜீத், சியான் விக்ரம், சிங்கம் சூர்யா, தனுஷ் என வரிசையாக யார் நடித்த படமும் இந்த ஆண்டுக்குள் திரைக்கு வருமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி நடித்த காலத்தில் படங்கள் வெளியீடு என்பது திருவிழா கோலமாகக் காட்சி அளித்தது. 300 நாள், 200 நாள், வெள்ளி விழா எனப் படங்கள் வருடக் கணக்கில் ஓடியது, ரஜினி, கமல் படங்கள் கூட வருடக் கணக்கில் ஒரு சில படங்கள் ஓடின. இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது. பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டும் ஓபனிங் இருக்கிறது மற்ற படங்களுக்கு ஓப்பனிங் என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது.
இன்றைக்கும் ரஜினி, கமல்,விஜய். அஜீத் படங்களுக்கு ஓப்பனிங் இருக்கத் தான் செய்கிறது மற்ற நடிகர்களின் படங்களுக்கு பிரமாண்ட ஒப்பனிங் என்பது கேள்விக் குறிதான். ஒப்பனிங் உள்ள 4 நடிகர்களில் 3 நடிகர் அரசியல் பேசுகிறார்கள். அஜீத் மட்டும் அரசியலில் தலையிடாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று படங்கள் நடிப்பது, ஐஐடி மாணவர்களுக்கு ஆளில்லா விமானம் வடிவமைப்பது எனக் கவனத்தைச் செலுத்துகிறார்.


ஆளும் கட்சியினரை ஹீரோக்கள் எதிர்த்தால் உடனே ரெய்டு, படங்களுக்குத் தடை என மிரட்டல்கள் வருகிறது. இந்த எதிர்ப்பெல்லாம் அந்த ஹீரோக்களுக்கு மக்களிடம் அதிகமாகி உள்ள செல்வாக்கைத் தான் காட்டுகிறது. தியேட்டரில் படம் வெளியானால் சுமார் ஒரு வாரத்திற்கு அந்த ஹீரோக்கள் பேசும் வசனத்தை கேட்க முடியாதளவுக்கு ரசிகர்களின் ஆரவாரம் காதை கிழிக்கிறது. சினிமைவைத் தாண்டி அரசியலுக்கு வரும்போது அதில் ரசிகர்களின் ஆதரவு மட்டுமல்லாமல் வெகு ஜனங்களின் ஆதரவும் பெருகிவிடுகிறது. அதுவொரு ஆட்சி மாற்றத்தையே கூட உருவாக்குகிறது. அதை நிரூபித்துக் காட்டினார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.

பிறக்கும்போதே எம்ஜிஆர் பணக்கார குடும்பத்தில் பிறந்துவிடவில்லை. ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தாயின் உழைப்பால் கால் வயிறு, அரை வயிறு என்று கஞ்சி குடித்த வறுமையை அனுபவித்தார் என்பதை அவரது வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது. அவரை மக்கள் செல்வாக்குடன் ஆட்சிக்கு வந்த போது மக்களின் பசி போக்க என்ன திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப ஆட்சி நடத்தினார். அதே போல் தான் ரஜினி, விஜய் போன்றவர்கள் வறுமையில் உழன்று படிப்படியாக முன்னேறி வந்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கின்றனர். கமல்ஹாசன் ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் பிறந்தாலும் அவர் சினிமா ஆர்வத்தில் படிப்பை விட்டு சென்னை வந்து நடன உதவியாளராக பணியாற்றிச் சிறு வேடங்களில் நடித்து அதில் கஷ்டப்பட்டும் மற்றவர்களின் கஷ்டங்களை நேரில் பார்த்தும் தனது திறமையால் வளர்ந்து இன்றைக்கு உலக நாயகனாகத் திகழ்கிறார். அதே போல் தான் விஜய்யின் இன்றைய வளர்ச்சியும். அவர் நடிகனாக அறிமுகமான போது இதெல்லாம் ஒரு மூஞ்சா என்று சொல்லி முளையிலேயே அவரை விரட்டப் பார்த்தார்கள். அவருக்கு உறுதுணையாக அவரது தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இருந்து நம்பிக்கையூட்டி அவரை ஒரு நடிகராக நிலைநிறுத்தினார். அதன்பிறகு இன்று தளபதி என்றால் தமிழ்நாட்டில் தெரியாதவர்களே கிடையாது என்று தனது உழைப்பால் ரசிகர்கள் என்ற நண்பர் பட்டாளத்தைத் திரட்டியிருக்கிறார்.

அரசியலிலோ, ஆளும் தரப்பிலோ மக்களுக்கு விரோதமாக ஒரு செயல் நடக்கிறதென்றால் அதைத் தட்டி கேட்கும் போது அதற்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இந்த எழுச்சியை அடக்கி ஒடுக்கி விடலாம் என்று சிலர் காணும் கனவு பலிக்காமல் போவதற்கு அந்தந்த ஹீரோக்களின் தனிப்பட்ட செல்வாக்கு தான் காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது. ரஜினியை வளைத்து போடலாம். கமலை வளைத்துப் போடலாம், விஜயை வளைத்துப் போடலாம் என்று மத்திய. மாநில ஆளும் கட்சிகள் பல வழிகளில் முயன்றும் அது நடக்கவில்லை. அதனால் தான் விஜய் ஒரு குரல் கொடுத்தால் அதற்குப் பதில் தர முடியாமல் அஜீத்தைப் புகழ்ந்து பேசி அவரது தலையில் ஐஸ் வைத்து அவரை வளைத்துப் போடப் பார்க்கிறார் ஒரு மந்திரி. ஆனால் இப்படிப் பேசும் அமைச்சருக்கோ அல்லது அரசியல் வாதிகளோ அந்த ஹீரோக்கள் எல்லோருமே அதாவது ரஜினியும் கமலும் அதே போல் விஜய்யும் அஜீத்தும் நெருக்கமான நண்பர்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
பிரிதாளும் சூழ்ச்சியைக் கையாளும் ஆளும் கட்சியின் திட்டங்களை அறியாதளவிற்கு அவர்கள் ஒன்றும் பப்பா இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தியேட்டரில் படம் வருவதால் தானே இந்த நடிகர்களுக்கு இவ்வளவு மவுசு தியேட்டரையே மூடிவிட்டால் என்று யாரோ அதிபுத்திசாலி தந்த யோசனைதான் தற்போது நடக்கும் கொரோனா லாக் டவுனில் சினிமாவையே முடக்கி போட்ட சதியோ என்று கோலிவுட்டில் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.

ரஜினியின் அண்ணாத்த, கமலின் இந்தியன் 2, தலைவன் இருக்கிறான், விஜய்யின் மாஸ்டர், அஜீத்தின் வலிமை, விக்ரமின் கோப்ரா, சூர்யாவின் சூரரைப்போற்று, தனுஷின் ஜெகமே தந்திரம் போன்ற படங்களை முடிக்க முடியாமலும், முடிந்த படத்தை வெளியிட முடியாமலும் , திட்டமிட்ட படத்தை ஷூட்டிங் நடத்த முடியாமலும் இருக்க அரசே போட்ட தடைபோல்தான் இந்த கொரோனா ஊரடங்கு தடை உள்ளது. கொரோனாவுக்கு பயந்து அரசு செயல்படாமல் முடங்கி இருக்கிறதா. அரசு இயந்திரங்கள் முடங்கி இருக்கிறதா? அவர்களுக்கான வருமானம் வராமல் போயிருக்கிறதா என்று கேள்வி எழ ஆரம்பித்திருக்கிறது, தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது, அந்த பிரசாரத்தில் பங்கேற்க முடியாமல் நடிகர்களுக்கு ஹூட்டிங் பணிகள் தலைக்கு மேல் இருக்கும் படியும் அதற்குள் எந்த படமும் வந்து இந்தியன் சேனாபதி தாத்தா போல் கேள்வி எழுப்பிவிடக் கூடாது என்ற பின்னப்பட்ட சதிதான் தற்போதைய சினிமா தொழிலின் முடக்கம் என பார்க்கப்படுகிறது, இந்த நெருக்கடிகள் எல்லாம் தேர்தல் என்ற ஒன்று நெருங்கி வரும் போது ரஜினி, கமல், விஜய் என்ற ஒரு புதிய அரசியல் கூட்டணி வருவதற்கான வாய்ப்பை இப்போதுள்ள ஆளும் கட்சியினர் ஏற்படுத்தி வருகின்றனர் என்பது மட்டும் தெரிகிறது.

You'r reading கொரோனாவா, கோடம்பாக்கம் அரசியலா - சினிமாவும் , தமிழக அரசும்...! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை