தமிழகத்தில் கொரோனா பரவும் வேகம் இன்னும் கட்டுப்படவில்லை. நேற்று ஒரே நாளில் இந்நோய்க்கு 88 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 4807 பேருக்குத் தொற்று பாதித்துள்ளது.
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மேல் பாதித்துள்ளது. இந்தியாவில் நோய்ப் பாதிப்பில் தொடர்ந்து தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நோய் பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. மாநிலம் முழுவதும் நேற்று(ஜூலை18) 4807 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 76 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 65,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில், நேற்று டிஸ்சார்ஜ் ஆன 3049 பேரையும் சேர்த்தால், இது வரை ஒரு லட்சத்து 13,856 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று மட்டுமே 88 பேர் பலியானார்கள். இவர்களுடன் இது வரை 2403 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவும் வேகம் குறைந்திருப்பதாகத் தெரிந்தது. தினமும் எத்தனை பரிசோதனைகள் செய்யப்படுகிறது எனத் தெரியவில்லை. ஆனால் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்படுகிறது. நேற்று 1219 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் 84,598 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 323 பேருக்கும், காஞ்சிபுரம் 97, மதுரை 185, திருவள்ளூர் 370 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 8044 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூரிலும் பாதிப்பு எண்ணிக்கை 8702 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 20 மாவட்டங்களில் 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. நேற்று தூத்துக்குடி 160, நெல்லை 155, விருதுநகர் 179, தேனி 144, சிவகங்கை 110 பேர் என்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.