தமிழகத்தில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மழையும் பெய்வதால் சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கிறது.கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 21 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன்பின், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன. கடைசியாக, 6-ம் கட்டமாக ஜூலை 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால், செய்தித்தாள் விற்பனை போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்படுகிறது.மளிகை, காய்கறி கடைகள் உள்பட அனைத்து விதமான கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்புகளை வைத்து போக்குவரத்தைத் தடுத்துள்ளனர்.சென்னையில் பல இடங்களில் நேற்று நள்ளிரவு முதல் மழையும் பெய்து வருவதால் சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் அதிகமாகச் செல்லவில்லை. ஆள் நடமாட்டமும் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது.