கீழடி அகழ்வாராய்ச்சி நடந்த பகுதியில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைப்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடைபெற்று வந்தது. ஐந்து கட்ட அகழ்வாராய்ச்சியில் ஆபரணங்கள், மண்பாண்டங்கள், சுடுமண் உருவங்கள் என்று சுமார் 15,500 பழமையான பொருட்கள் கிடைத்தன. மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை இந்த ஆராய்ச்சியைக் கைவிடும் முடிவுக்கு வந்தது. அதற்குத் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, மீண்டும் 6ம் கட்ட அகழ்வாராய்ச்சி செய்ய முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழமையான பொருட்களைக் கொண்டு கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக 12 கோடியே 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2.10 ஏக்கர் நிலமும் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கீழடியில் பிரம்மாண்ட அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கீழடி அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.