ராஜபாளையம் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இது வரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், முதல்வர் அலுவலக தனிச் செயலாளர் உள்படப் பலரும் இந்நோயால் பலியாகியுள்ளனர்.
அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ உள்படப் பல எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர் வளர்மதி போன்றவர்களும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றனர். இந்த வரிசையில், தற்போது விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அவரது மகளுக்குத் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில், அவரது மனைவி கலாவதி, மகன்கள் ராமன், லட்சுமணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று குணம் அடைந்திருந்தனர். இந்த நிலையில் தற்போது தங்க பாண்டியனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த வாரம் வேலூர், ராணிப்பேட்டை எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் என 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்றிணைவோம் வா என்ற பெயரில் கொரோனா நிவாரண உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாலோ, என்னவோ, திமுகவினர் பலருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.