10 ஆண்டுகள் கனவு... அழகிய தமிழில் ஒலிபரப்பு.. தமிழ் மக்கள் கனவை நனவாக்கிய கேப்டன் `ப்ரிய விக்னேஷ்!

10 years dreams Captain `Priya Vignesh who made the dream of Tamil people

by Sasitharan, Jul 24, 2020, 19:56 PM IST

கடந்த இரண்டு மூன்று நாட்களாக இணையத்தில் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில்,``காவிரி ஆற்றங்கரையில் அழகாக அமைந்துள்ள திருச்சி மாநகர் வான்வழி பாதை வழியாக, மதுரையை நோக்கி பயணமாகிறோம்" என்று அழகிய தமிழில் விமானத்தில் ஒலிக்கிறது அந்தக் குரல். இந்த குரலே அந்த வீடியோ வைரலானதற்கு காரணம். எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்றான பிறகு ஒன்றில் மட்டும் தமிழ் ஒலிக்காத குறை தமிழர்கள் மத்தியில் இருந்து வந்தது. அது விமானத்தில் தான். அந்தக் குறையைப் போக்கும் வகையில் இந்த வீடியோ அமையவே, தமிழ் மக்கள் இதனைக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்திற்குள் பறக்கும் விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு வெளியாவது இல்லை எனப் பலர் ஆதங்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரின் ஆதங்கத்தை போக்கியவர் ஒரு தமிழ் விமானி.

யார் அந்த விமானி?

அழகிய தமிழில் பயணிகளை ஆச்சரியப்படுத்திய அந்த விமானியின் பெயர் ப்ரிய விக்னேஷ். தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டாலும் விக்னேஷ் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் வட சென்னையில் தான். ராயபுரம் தான் பல ஆண்டுகளாக இவரது வாழ்விடம். இதனால் தான், ``நான் வடசென்னைக்காரன். என் ஆன்மாவில் ராயபுரத்தின் உப்புக் காற்று கலந்திருக்கிறது" எனப் பெருமைப்படுகிறார். இவரது வைரல் வீடியோ குறித்தும், விமானி ஆனது குறித்தும் பேசுகையில், ``சாதாரண சாலையோர வியாபாரி தான் என் அப்பா. அம்மா அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியர். சிறுவயது முதலே விமானி பணி தனி ஆர்வம் கனவு இருந்தது. அதே போல் வரலாறு மீதும் தீரா ஆர்வம் இருந்தது. இதனால் படிக்கும் காலங்களிலேயே வரலாறு குறித்து நிறையத் தெரிந்துகொண்டேன்.

என்னைப் போன்று சாதாரண குடும்பத்தில் பிறந்த பையன் விமானி ஆக வேண்டும் என்பது நிறைவேறாத கனவு. ஆனால் அது எனக்குச் சாத்தியப்பட்டதற்கு என் தாய், தந்தையின் அர்ப்பணிப்பே காரணம். ஆம், விமானியாகப் பயிற்சி பெற பெருந்தொகை தேவைப்பட்ட போது, என் அம்மாவின் பி.எஃப் பணமும், என் அத்தையின் சொந்த வீடும் தான் கைகொடுத்தது. இதுவும் எனது முதல் இரண்டு கட்ட பயிற்சிக்கு மட்டும் தான் உதவியது. பின்னர் என் அப்பாவின் நண்பர் உதவியதால் தான் நான் விமானியாக முடிந்தது.

விமானத்தில் தமிழில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்பது எனது பத்து ஆண்டுகள் கனவு. 10 ஆண்டுகள் முன்பு, நண்பர்களிடம், நான் விமானி ஆனால் விமானத்தில் தமிழில் தான் அறிவிப்பை வெளியிடுவேன் எனப் பேசிக் காட்டுவேன். இப்போது அதை நனவாக்கி இருக்கிறேன். முதலில் தமிழில் பேசத் தயக்கமாக இருந்தது. என் தயக்கத்தைத் தகர்த்தவர் கேப்டன் சஞ்சீவ் என்பவர் தான். விமானத்தின் ராடாரில் காட்டாத இடங்களைக் கூட அவர் அறிவிப்பில் கூறுவார்.

வட இந்தியரான கேப்டன் சஞ்சீவ், `இது உன் சொந்த மாநிலம்தானே. என்னை விட உனக்கு இந்த இடங்களை நன்றாகத் தெரியும். இதை நீயே அறிவித்தால் இன்னும் உணர்வுப்பூர்வமாக இருக்கும்" எனக் கூறி அவர் கொடுத்த ஊக்கமே நான் தமிழில் அறிவிப்பை வெளியிடக் காரணம். பெரும்பாலும் தமிழகத்துக்குள் தான் பயணிக்கிறேன். என் விமானத்தின் பயணிகளில் 90 சதவீதம் பேர் தமிழர்களாக இருக்கும்போது, தமிழ் மொழியில் பேசுவது பயணிகளிடம் மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும்" என நெகிழ்கிறார்.

You'r reading 10 ஆண்டுகள் கனவு... அழகிய தமிழில் ஒலிபரப்பு.. தமிழ் மக்கள் கனவை நனவாக்கிய கேப்டன் `ப்ரிய விக்னேஷ்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை