டிடிவி தினகரன் அணியில் நாங்கள் சேருவதால் எந்த பாதிப்பும் வராது. எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
அதிமுக இரு அணிகளாக பிரிந்த பிறகு அதிமுகவில் இருந்து டிடிவி தினகரன் உடன் 18 எம்.எல்.ஏக்கள் உடன் வந்தனர். இதனையடுத்து, கட்சித்தாவல் தடைசட்டத்தின்படி அவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
இதற்கிடையில், நடந்து முடிந்த கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி.தினகரன் சுயேட்சையாக வெற்றிபெற்றதை அடுத்து தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாக கூறப்பட்டது. மேலும், அதிமுக ஸ்லீப்பர் செல்கள் இருப்பதாகவும், தக்க நேரத்தில் அவர்கள் வெளியே வருவார்கள் என்று டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தனக்கு அபார வெற்றியை பெற்றுத் தந்த குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்கக் கோரி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் டிடிவி தினகரனுக்கே குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
மேலும் கட்சிக்கு தினகரன் ஒதுக்கக்கோரிய பெயர்களில் ஒன்றை ஒதுக்குமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 3 வாரத்திற்குள் கட்சியின் பெயர், சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து, தனது கட்சியின் பெயர்களாக 3 பெயர்களை தினகரன் தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தார்.
அனைத்து இந்திய அண்ணா அம்மா திராவிட முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் அம்மா திமுக, எம்ஜிஆர் அம்மா திராவிடர் கழகம் என்ற 3 பெயர்களை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தான், மார்ச் 15ஆம் தேதி வியாழக்கிழமை, மதுரை மாவட்டம் மேலூரில் நடக்கவுள்ள விழாவில், தனது கட்சியின் கொடி மற்றும் பெயரை டிடிவி.தினகரன் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,, டிடிவி தினகரன் புதிய கட்சி தொடங்குவது குறித்து சென்னையில் நேற்று முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் செந்தில் பாலாஜி, பழனியப்பன், ரெங்கசாமி உள்பட 7 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மட்டும் கலந்து கொண்டனர். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்பட தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.
இது குறித்து தங்க தமிழ்செல்வனிடம் கேட்ட போது, “நாங்குநேரில் பொதுக் கூட்ட நிகழ்ச்சி இருந்ததால் நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் நான் பங்கேற்க முடியவில்லை. டிடிவி தினகரன் தனிக் கட்சி ஆரம்பிப்பது தற்காலிக ஏற்படாக கோர்ட்டு உத்தரவின்படிதான் நடைபெறுகிறது.
அதிமுகவையும் இரட்டை இலை சின்னத்தையும் மீட்பதுதான் எங்களது நோக்கமாகும். இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இடைக்கால ஏற்பாடாக தேர்தலில் போட்டியிடும் வசதிக்காக புதிதாக கட்சி பெயர், சின்னத்தை பயன்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன்படி குக்கர் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அனைத்திந்திய அம்மா அண்ணா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.மு.க., எம்.ஜி.ஆர். அம்மா தி.க. ஆகிய 3 பெயரில் ஒரு பெயரை கட்சிக்கு தேர்ந்தெடுத்து தேர்தல் கமிஷனில் பதிவு செய்யலாம் என்று அறிவுறுத்தி உள்ளது. கோர்ட்டு உத்தரவின் பேரில் தினகரன் புதிய பெயரில் கட்சி தொடங்குவதால் அதில் அதிமுக எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் நாங்கள் சேருவதால் எந்த பாதிப்பும் வராது. எங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது” என்று தெரிவித்துள்ளார்.