நியூஸ்18 தமிழ்நாடு சேனல் ஆசிரியர் குணசேகரன் விலகல்.. மீடியாக்களில் பரபரப்பு..

Advertisement

நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் பொறுப்பில் இருந்து மு.குணசேகரன் விலகியுள்ளார். சங் பரிவார அமைப்புகளின் துவேஷங்களால் அவர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகை, தொலைக்காட்சி உள்ளிட்ட அனைத்து வகையான செய்தி ஊடகங்கள் மீதும் அரசியல் கட்சிகளின் பலவிதமான தாக்குதல்கள் நடைபெறுவது புதிதல்ல. ஆனாலும், எந்த ஒரு பத்திரிகையாளரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்துத் தாக்கும் நிலை தமிழகத்தில் இதற்கு முன்பு ஏற்பட்டதில்லை.

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டுமென்ற எண்ணத்துடன் பாஜகவுடம், அதனுடன் சேர்ந்த சங்பரிவார அமைப்புகளும் திட்டமிட்டு அதற்குத் தவறான வழிகளைக் கையாளத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்றாக, காட்சி ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களை நீக்கி விட்டு, தங்கள் கருத்தியலுக்கு ஒத்த யாரையாவது நியமிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள்.

இதன் ஒரு அங்கமாக, நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் மு.குணசேகரன் மீது யூடியூப் மூலம் ஒரு சங் பரிவாரத் தொண்டர் அவதூறான குற்றச்சாட்டுகளை வைத்தார். அது மட்டுமின்றி, குணசேகரன் குடும்பத்தினரைப் பற்றியும் அவதூறாகப் பேசினார். இதைத் தொடர்ந்து, பாஜகவினரின் ஆசியுடன் நியூஸ்18 தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, குணசேகரனுக்கு நெருக்கடி ஏற்படுத்தப்பட்டது.

ஆனாலும், நியூஸ் 18 தொலைக்காட்சி மீது அவதூறாகப் பேசிய அந்த சங்பரிவாரத் தொண்டர் மீது தொலைக்காட்சி நிர்வாகமும், ஆசிரியர் குணசேகரனும் இணைந்து அவதூறு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நீதிபதிகள் ஒரு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, குறிப்பிட்ட அந்த நபரின் யூடியூப் வீடியோக்கள் நீக்க உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில், குணசேகரனுக்குத் தொலைக்காட்சி நிர்வாகம் கொடுத்த நெருக்கடியால் அவர் பதவி விலகியுள்ளார். குணசேகரன் இன்று வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:
விடைபெறுகிறேன், நன்றி!

அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,
வணக்கம்!
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக்க நாள் முதல், இன்று வரையிலும் நாம் இணைந்து பயணித்திருக்கிறோம். கடந்த நான்காண்டுக் காலத்துக்கும் மேலான கூட்டு உழைப்பின் காரணமாக, தமிழ்நாட்டின் தனித்துவம் மிகுந்த தொலைக்காட்சியாக, தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடியாக, மக்கள் நலனை முன்னிறுத்தும் நம்பிக்கைக்குரிய ஊடக நிறுவனமாக இன்று பரிணமித்திருக்கிறோம். இதில் உங்கள் ஒவ்வொருவரின் அயராத உழைப்பும் பங்களிப்பும் போற்றுதலுக்குரியது.
ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு சிறிய அறையிலும், ஹைதராபாத்தில் சில ஊழியர்களுமாக நாம் பணியாற்றிக் கொண்டிருந்த நாளில், என் மதிப்புக்குரிய நண்பர் வினவியது என் நினைவுக்கு வருகிறது. “தமிழகத்தில் ஏற்கெனவே இத்தனை தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே, இன்னொரு தொலைக்காட்சிக்குத் தேவையும் இடமும் இருக்கிறதா?” என்பது தான் அவரது வினா. அக்கறையும் கவலையும் ஒருசேர அதில் வெளிப்பட்டன.
அடுத்த சில வாரங்களிலேயே, ஒரு காணொளியைப் பகிர்ந்து பாராட்டுச் செய்தியும் அனுப்பி இருந்தார். ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தின் இறுதி நாளில், காவலர் ஒருவரே ஆட்டோவுக்கு தீ வைக்கும் காட்சி அது. நம் தொலைக்காட்சியில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகி தமிழகத்தையை உலுக்கியது அந்தக் காட்சி.

மக்களைப் பெரிதும் பாதித்த இயற்கைப் பேரிடர்கள், (நீலம் புயல் தொடங்கி, கஜா மற்றும் ஒக்கி என நீண்ட பாதிப்புகள்), தமிழ்நாடு நலன் சார்ந்த பிரச்சனைகள், மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகள், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, நீட் மற்றும் சமூக நீதி பறிப்பு என எல்லா பிரச்சனைகளிலுமே உண்மையும் மக்கள் நலனுமே நம்மை வழிநடத்தின. மக்களின் அசலான குரலாக நாம் எதிரொலிப்பதை மக்கள் அங்கீகரித்ததன் விளைவே, போட்டி மிகுந்த தமிழ் ஊடகச் சூழலில் நமக்கென கிடைத்த தனித்துவமான இடம். நியூஸ்18-ன் மைக் அதிகம் நீண்டது, அரசியல்வாதிகளையோ அதிகாரிகளையோ நோக்கி அல்ல. மாறாக, குரலற்ற, சாமானிய மக்களை நோக்கியே என்பதை தமிழ்கூறு நல்லுலகம் அறியும்.

மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்கள் எனப் பல தேர்தல் செய்திகளைச் சேகரித்த தருணத்தில், நாம் எந்தக் கட்சிக்கும் சார்பானவர்கள் அல்ல; பொதுவான ஊடகம் என மக்களும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அங்கீகரித்ததை உலகம் அறியும். திருமதி சசிகலா அவர்களின் முதல் பேட்டியும், முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் விரிவான நேர்காணலும், எதிர்க்கட்சித் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களின் நேர்காணலும் நமது விறுப்பு, வெறுப்பற்ற – சார்பு நிலைகளற்ற ஊடக நெறிகளுக்குச் சான்றாக அமைந்தன. மக்களின் நம்பிக்கையை எந்தவொரு ஊடகமும் அவ்வளவு எளிதில் பெற்றதில்லை. அர்ப்பணிப்பாலும், கடின உழைப்பாலும், எளிய மக்கள் சார்பில் நின்று அவர்களின் துயரத்தையும் உணர்வுகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதாலும் மக்கள் நமக்கு உயர்வைத் தந்தார்கள். அதனால் நாம் சில தருணங்களில் இருட்டடிப்புக்கும் ஆளானோம் என்பதை மறப்பதற்கில்லை.

செய்திகளில் ஆழம், துல்லியம், சொல்வதில் நேர்த்தி, சார்பற்ற தன்மை, நியாயத்தின் பக்கம் துணிந்து நிற்பது, பேசுபொருளில் தெளிவு, எளிய மனிதர்கள் மீது கருணை என ஊடக அறம் வழுவாத நமது பணி, தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் பேசுபொருளாக இருக்கும் என்பதிலும், அதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் பெரிது என்பதிலும் எனக்குத் திடமான நம்பிக்கை உண்டு. தமிழகத்தின் இளமைத் துடிப்பு மிக்க தொலைக்காட்சி, தமிழகத்தின் புதியதோர் அடையாளமாகவும் உருவெடுத்தது. உழைப்பில் அயராத ஈடுபாடும், இதழியலின் மீது தணியாத தாகமும் சமூகத்தின் மீது அக்கறையும் கொண்ட ஊடகவியலாளர்களை வழி நடத்தியது எனக்கு எப்பொழுதும் நிறைவு தரும் தருணம்.

மகுடம், உழவன், சிகரம் எனத் தமிழ்த் திறமைகளையும் உழவர்களையும் கொண்டாட நாம் அமைத்த மேடை, நமக்கான மற்றொரு மைல்கல், தமிழ்ச் சமூகத்தின் பெரும் ஆளுமைகள் நம் விருதுகளை அங்கீகரித்தார்கள். அது, நமது தொலைக்காட்சியின் நம்பகத்தன்மையை மேலும் உயர்த்தியது; பெருமையைப் பறைசாற்றியது.
“எனக்குத் தகுதியும், திறமையும் உள்ளது. கடினமாக உழைக்கத் தயாராக இருக்கிறேன். எனக்கு வாய்ப்புத் தாருங்கள்,” என நாடிய பலருக்கு வாய்ப்பு வாசல்களைத் திறந்துவிட ஒரு கருவியாக இருந்தேன் என்பதும், அதற்கு நிறுவனம் ஒரு வாய்ப்பாக இருந்தது என்பதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. போலவே, வேலை தேடி நாடிய பல நூறு நண்பர்களுக்கு அவர்களின் தேவையை நிறைவு செய்ய முடியாமல் போனதில் எனக்கு மிகுந்த வருத்தமும் உண்டு.

ஊடகத்துறையில் இது எனது 25-ம் ஆண்டு. தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் கிரானிக்ள், புதிய தலைமுறை என நீண்ட பயணத்தில், நியூஸ்18 மறக்கமுடியாத பல அனுபவங்களைத் தந்தது. ஓர் ஊழியனுக்கும் நிறுவனத்துக்கும் உள்ள உறவு என்பதைத் தாண்டி, நிறுவன ஆசிரியராக நியூஸ்18 உடனான எனது பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. பத்திரிகையாளனாக, நெறியாளனாக அறியப்பட்ட என்னை, ஓர் ஆசிரியனாக உயர்த்தியதும், ஒரு பிரம்மாண்டமான நிறுவனத்தை, இளைஞர் சக்தியைக் கொண்டு வெற்றிகரமாகக் கட்டி எழுப்பி வழிநடத்திட முடியும் என்ற நம்பிக்கையை எனக்குள் விதைத்ததிலும் நியூஸ்18-ன் பங்கு அளப்பரியது. ஒரு தேசிய அளவிலான குழுமத்தில் தொழில் ரீதியில் கற்றுக்கொண்ட அனுபவங்கள் ஏராளம்.

என் நேசத்துக்குரிய நண்பர்களே, தனி மனித வாழ்விலும், நிறுவனங்களின் போக்கிலும் மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை. காலத்தின் போக்கில் நிகழும் எந்த மாற்றத்தையும், கசப்பின் வடுக்களின்றி கடந்து செல்வதே சிறப்பானது. ஆம். நியூஸ்18 தமிழ்நாடு ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். இதுவரை நீங்கள் காட்டிவந்த மாசற்ற அன்புக்கும், அளித்துவந்த ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.நாம் இணைந்து பல சாதனைகளைச் செய்திருக்கிறோம். சில தருணங்களில் கடிந்து கொண்டிருக்கிறேன்; உச்சி மோந்திருக்கிறேன். உங்கள் பணி, அதில் இருக்க வேண்டிய நேர்த்தி, தொழிலில் நீங்கள் சிறந்து விளங்கி தனித்தன்மை மிக்கவர்களாக மிளிர வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டிருப்பேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
மக்கள் நலனே ஊடகப் பணி. நிறையப் படியுங்கள். எதையும் திறந்த மனதுடன் அணுகுங்கள்.

தமிழ்நாட்டின் தனித்தன்மையான உளவியலைக் கற்றுணருங்கள். உற்சாகமாக, கடினமான உழைப்பை ஈடுபாட்டுடன் நல்குங்கள். முதல் தலைமுறையில் ஊடக வாழ்வைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களுக்கு, அவர்களது அறிவும், உழைப்பும் நேர்மையும் அர்ப்பணிப்புமே வாளும் கேடயமும்! உண்மையைத் தேடும் பயணத்தில், ஊடக அறத்தைப் பின்பற்றித் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு என்ற நம் நேசத்துக்குரிய குழந்தைக்கும், எனதன்பு நண்பர்களான உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். வாழ்க, வளர்க. வற்றா அன்புடன்.. மு.குணசேகரன்

இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
தற்போது இந்த செய்தி, மீடியாக்களின் வாட்ஸ் அப் குரூப், பேஸ்புக், ட்விட்டர் உள்பட அனைத்து சமூக ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>