ஊடகங்களில் உள்ள பெண் பத்திரிகையாளர்களைத் தரக் குறைவாக விமர்சித்து வரும் நபரை காவல்துறை கைது செய்தவுடன் ஜாமீன் அளித்திருப்பதைப் பெண்கள் சங்கங்கள் கடுமையாகக் கண்டித்துள்ளன.தமிழ்நாடு பெண்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கை:
கிஷோர் கே சாமி என்ற நபர், சமூக ஊடகத்தில் ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்த சூழலில், பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை காவல் துறை கடந்த ஜூலை 29ம் தேதி வழக்குப் பதிவு செய்து கைது செய்தது.
இதைத் தாங்க முடியாத பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி போன்றோர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து அந்த நபரை விடுதலை செய்துள்ளதாகத் தெரிகிறது.
பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்டக் குற்றவாளிகள் அ.தி.மு.க பின்னணி கொண்டவர்கள் என்பதும், கடந்த 29ம் தேதி நாகர்கோயில் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய உத்திர பிரதேசம் உன்னவோ பகுதியைச் சேர்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப்சிங் வழக்கு, ஜம்மு முஸ்லீம் பழங்குடி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்கு ஆதரவாக ஜம்மு பா.ஜ.கவினர் நடத்திய போராட்டம், ஜம்மு பா.ஜ.க ஆதரவு வழக்கறிஞர் சங்கம் வழக்கை நடத்த விடாமல் செய்த அடாவடித்தனங்கள், தமிழகத்தில் ஊடகத் துறை பெண்கள் மீது நடிகர் எஸ்.வி.சேகரின் பாலியல் வன்முறையான பேச்சுக்கள் போன்றவை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இந்திய அளவில் பா.ஜ.க வும் தமிழக அளவில் அ.தி.மு.க வும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை, பாலியல் குற்றவாளிகளை, பெண்களின் மாண்பை இழிவு படுத்தும் பேச்சுக்களை ஆதரிக்கும்/அடைக்கலம் தரும் கட்சிகளாக இருப்பது அவர்களின் கடந்த கால செயல்பாடுகளிலிருந்து தெரிகிறது. பா.ஜ.கவும் அ.தி.மு.க.வும் பெண்களின் நலனுக்குப் பாதுகாப்புக்கு எதிரான கட்சிகளாக இருக்கின்றன என்று கூறுகிறோம்.
பெண்களைத் தரக்குறையாகப் பேசும் கிஷோர் கே சாமி என்ற நபரைப் பிணையில் விடுவிக்க அழுத்தம் கொடுத்த அ.தி.மு.க அமைச்சர்களை வன்மையாக கண்டிக்கிறோம். காவல் துறையைக் கடமையைச் செய்ய விடாமல் ஆட்டுவிக்கிற எச்.ராஜாவையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஊடகத்துறை பெண்களை, பெண் செயல்பாட்டாளர்களை சமூக ஊடகத்தில் தரக்குறைவாகப் பேசுகிற கிஷோர் சாமியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு செயலாளர் மஞ்சுளா வெளியிட்ட அறிக்கை :சமூக ஊடகங்களில் கிஷோர் கே சாமி என்கிற பேரில் வலம் வரும் நபர், சில வருடங்களாகவே பொது வெளியில் இயங்கும் பெண்கள் குறித்து ஆபாசமாக அருவருப்பாகப் பதிவு செய்து வருகிறார். 2013ல் தொடங்கி தொடர்ச்சியாகப் பெண்களை இழிவுபடுத்தி இவர் எழுதிய பதிவுகள் மீது இதுவரை எந்த பெரிய நடவடிக்கையும் இல்லை.
பெண் பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் அவதூறாகக் கொச்சையாக எழுதும் கிஷோர் மீது கிட்டத்தட்ட பத்து புகார்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தரப்பட்டிருக்கின்றன. இதில் 2 புகார்கள் மீது மட்டும் காவல்துறை நடவடிக்கை எடுத்தது. ஆனால் கைதாகி சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கையும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
மத்திய, மாநில ஆளும் கட்சிகளுக்கு நெருக்கமாக இருப்பதால் அதிமுக மற்றும் பாஜக தலைவர்களின் அழுத்தம் காரணமாகவே இத்தனை புகார்களுக்கு இடையிலும் கிஷோர் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக. ஜுலை29ம் தேதி நிகழ்ந்த கைது நடவடிக்கைக்குப் பிறகு பாஜக தலைவர் எச்.ராஜா கிஷோருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததும் இதை உறுதி செய்கிறது. சமீபத்தில் ஏபிவிபி-யின் தேசிய தலைவர் பொறுப்பில் இருக்கும் சுப்பையா என்பவரும், அவரது வீட்டருகில் வசிக்கும் ஒரு முதிய பெண்ணின் வீடு முன்பாக சிறுநீர் கழிப்பது தகாத வார்த்தை பேசுவது போன்ற தொல்லைகள் தந்து அவர்மீது புகார் அளிக்கப்பட்ட போது பாஜக தலைவர்கள் அவரையும் காப்பாற்ற முயற்சி எடுத்தார்கள்.
பெண் பாதுகாப்பு, பெண் நலம் என்று பேசும் இக்கட்சிகள் தொடர்ச்சியாகப் பெண்களைத் தரக்குறைவாக அவதூறாகப் பேசும் நபருக்குப் பாதுகாப்பு அளித்து அவரை வெளிப்படையாக ஆதரிப்பது ஏன்? பெண்களைப் பற்றித் தொடர்ந்து அவதூறு பேசி, அதற்காகச் சட்ட நடவடிக்கையைச் சந்தித்துக் கொண்டிருக்கும் கிஷோர் போன்ற நபர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பாஜக அதிமுக போன்ற கட்சிகள் சொல்லும் செய்தி என்ன? சமூகத்தில் பெண் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை சட்டரீதியாகச் செயல்படாமல் ஏன் அழுத்தத்திற்கு அடி பணிகிறது? பெண்களுக்கு எதிரான சிந்தனைகளுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளாக இன்று பொதுவெளியில் அடையாளம் காணப்பட்டிருக்கும் பாஜக மற்றும் அதிமுகவில் உள்ள பெண் தலைவர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகளை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் முன்வைக்கிறது.
கிஷோர் சாமி போன்ற ஒரு கீழ்த்தரமான நபர் மீது பதிவு செய்யப்பட்டிருக்கும் எல்லா புகார்களையும் உடனடியாக காவல்துறை கவனத்தில் எடுத்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கிஷோர் சாமி போன்ற குற்றச் செயல்கள் புரிபவர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதையும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு மஞ்சுளா கூறியுள்ளார்.