கேரளாவில் இன்று(ஜூலை31) பக்ரீத் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் தொழுகை நடத்தத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கேரளாவில் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மசூதிகளைத் திறப்பதற்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, திருவனந்தபுரம் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் மசூதிகள் திறக்கப்பட்டன. அங்கு முஸ்லிம்கள் சமூக இடைவெளி விட்டு தொழுகை நடத்தினர்.
தமிழகத்தில் நாளை பக்ரீத் கொண்டாடப்படுகிறது. வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படாததால், வீடுகளிலேயே தொழுகை நடத்துமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸ் பரவாமல் இருக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.நோய்த்தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை அனைவரும் கடைப்பிடித்து ஆக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.
எனவே நாளை (சனிக்கிழமை) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின் படி இஸ்லாமியச் சகோதரர்கள் தங்களது வீடுகளிலேயே சமூக இடைவெளியைப் பின்பற்றி தொழுகை நடத்த வேண்டும்.குர்பாணி அளிப்பதையும் அரசு வழிகாட்டுதலின்படி செயல்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இதனை எல்லாத் தரப்பு மக்களின் நன்மைக்காகத்தான் அரசு சொல்கிறது என நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி இந்த பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் படி கேட்டுக் கொள்கிறேன்.