புதிய கல்விக் கொள்கைக்கு அதிமுக அரசு கடும் எதிர்ப்பு..

by எஸ். எம். கணபதி, Aug 3, 2020, 11:42 AM IST

தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ள மும்மொழி கல்வித் திட்டத்தைத் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அரசுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கைக்குத் தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த கொள்கை தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று(ஆக.3) ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக மக்கள் கடந்த 80 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையில் உறுதியாக உள்ளனர். பல காலகட்டங்களில் தங்கள் உணர்வை பல்வேறு போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.

1963ம் ஆண்டு அலுவல் மொழிகள் சட்டத்தின் 3வது பிரிவில் இ்ந்தியை அலுவல் மொழியாகப் பின்பற்றாத மாநிலங்களைப் பொறுத்தவரை, மத்திய மாநில அரசுகளுக்கு இடையே தகவல் பரிமாற்றம் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், 1965ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் அரசு இந்தியை அலுவல் மொழியாக மாற்ற நடவடிக்கை எடுத்தது. அதை எதிர்த்து தமிழகத்தில் மாணவர்களும், மக்களும் பல்வேறு போராட்டங்களைத் தீவிரமாக நடத்தினர்.கடந்த 23.1.1968ல் தமிழக சட்டப்பேரவையில் ஒரு தீர்மானத்தை அண்ணா நிறைவேற்றினார். தமிழ்நாட்டில் உள்ள எல்லா பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றி விட்டு, தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே அகற்றிட இந்த மாமன்றம் தீர்மானிக்கிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டது.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியைத் திணிக்கக் கூடாது என்றும் அப்படி எடுக்கப்படும் எந்த முயற்சியையும் முறியடிப்பதில் உறுதியாக உள்ளோம் என்று ஜெயலலிதா சூளுரைத்தார். மேலும், தமிழை ஆட்சிமொழியாக்கவும், சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக்கவும் வலியுறுத்தி வந்தார்.இந்த மாபெரும் தலைவர்களைப் பின்பற்றும் அதிமுக அரசும், வரைவு தேசியக் கல்விக் கொள்கை வெளிவந்த போதே, அதில் உள்ள மும்மொழித் திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்தது. தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிப்போம் என உறுதிப்படத் தெரிவித்து, கடந்த 26.8.19 அன்றே பிரதமருக்குக் கடிதம் எழுதினேன்.இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வித் திட்டம் இடம்பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டில் அதை எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் இருமொழிக் கொள்கையையே பின்பற்றுவோம் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையை ஏற்று, மும்மொழிக் கொள்கையை மறுபரிசீலனை செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களின் கொள்கைக்கு ஏற்ப செயல்படுத்திக் கொள்ளச் செய்ய வேண்டுமெனப் பிரதமரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை