பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு அதிமுகவில் சேர அமைச்சர் உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்தார். சசிகலா தரப்பில் மிகவும் விசுவாசியாக இருந்ததால், அவருக்கு அந்த ஆட்சியில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் நயினார் திடீரென பாஜகவுக்குத் தாவினார். திராவிடக் கட்சிகளில் இருந்து செல்லும் முக்கியப் பிரமுகர்கள் யாருக்கும் பாஜகவில் பெரிய அளவில் முக்கியத்துவம் கிடைத்து விடுவதில்லை. அதற்கு விதிவிலக்காக எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராகக் கோலோச்சிய திருநாவுக்கரசருக்கு ராஜ்யசபா எம்.பி. மற்றும் மத்திய இணையமைச்சர் பதவியும் தரப்பட்டது. ஆனாலும், அவரால் மாநில பாஜகவில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை. அதன்பிறகு, அவர் காங்கிரசுக்குப் போய் தற்போது திருச்சி எம்.பி.யாக உள்ளார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன், தெலங்கானா கவர்னராக நியமிக்கப்பட்ட பிறகு, சில மாதங்களாக பாஜக மாநில தலைவர் பதவி காலியாகவே இருந்தது. இந்தப் பதவிக்கு நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டு வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் எல்.முருகன் மாநில தலைவரானார்.
இதையடுத்து, அதிருப்தியடைந்த நயினார் நாகேந்திரன், திமுகவில் சேரவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. திமுக முதன்மைச் செயலாளராக உள்ள கே.என்.நேருவை நயினார் சந்தித்துப் பேசி விட்டதாகவும் தகவல்கள் வந்தன. இந்த செய்தி வெளியானதுமே எல்.முருகன் விரைந்து சென்று நயினாரைச் சமாதானப்படுத்தினார்.அதன்பிறகும், நயினார் ஒரு டி.வி.க்கு அளித்த பேட்டியில், கட்சியில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் வருத்தமாக இருப்பதாகக் கூறினார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனால், நயினார் நாகேந்திரன் மீண்டும் பல்டி அடித்தார். நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு வெளியிட்டார்.
அதில் அவர், நண்பர்களே, என் கருத்தைத் தெளிவாகப் படிக்கவும்!! என் கோபம் பாஜகவை விட்டுச் செல்பவர்களுக்கு எதிரானது!! வருத்தம் உள்ளதா என்று கேட்டால் நிச்சயம் உண்டு என்று சொல்வேன்! கட்சித் தலைமையின் கொள்கையையும், தொலைநோக்கு பார்வையையும், உழைப்பை அங்கீகரிக்கும் மாண்பையும் அறியாத அவசரக்குடுக்கைகளைக் கண்டு ஒவ்வொரு பாஜக காரனுக்கும் ஏற்படும் நியாயமான கோபமும் வருத்தமும் எனக்கும் உண்டு!! என்று பதிவிட்டார்.இந்த நிலையில், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் இன்று சென்னையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நயினார் நாகேந்திரன் அதிமுகவில் சேர்ந்தால், அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். அவரோடு சென்ற அதிமுகவினர் அனைவரும் மீண்டும் அதிமுகவிற்கே வந்து விட்டார்கள். எனவே, நயினார் நாகேந்திரனும் அதிமுகவுக்கே திரும்பி வர வேண்டும் என்றார். நயினார் நாகேந்திரன் மீண்டும் அதிமுகவில் சேருவாரா அல்லது தேர்தல் வரை அமைதி காப்பாரா என்பது விரைவில் தெரியும்.