திமுகவில் இருந்து கு.க.செல்வம் சஸ்பெண்ட்.. ஸ்டாலின் அறிவிப்பு

by எஸ். எம். கணபதி, Aug 5, 2020, 13:29 PM IST

பாஜக தலைவரை சந்தித்த கு.க.செல்வத்தை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம் நேற்று டெல்லி சென்று மாலை 5 மணியளவில் அகில இந்திய பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்தார். முன்னதாக, அவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் சேரவுள்ளதாக தகவல் வெளியானது. மாநில தலைவர் எல்.முருகனும் இதை தெரிவித்திருந்தார். இந்த தகவல் வெளியானதும் பிற்பகல் 3 மணியளவில் அறிவாலயத்தில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். கு.க.செல்வம், பாஜகவில் சேர்ந்ததும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க முடிவு செய்யப்பட்டது.

இது பற்றி அறிந்து கொண்ட கு.க.செல்வம், நட்டாவை சந்தித்த பின்பு அளித்த பேட்டியில், தான் பாஜகவில் சேரவே இல்லை என்று மறுத்தார். அதே சமயம், திமுக தலைமையை விமர்சித்தும், பிரதமர் மோடியை புகழ்ந்தும் பேட்டி கொடுத்தார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் தனது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படாமல் காப்பாற்றிக் கொள்ளவே அவர் அப்படி பேட்டி அளித்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.இந்த சூழலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து கு.க.செல்வம் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட அவரை தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடப்படுகிறது. உங்களை ஏன் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்று கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய சென்னை மேற்கு மாவட்டத்தின் செயலாளராக இருந்த ஜெ.அன்பழகன், சமீபத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தார். இதையடுத்து, மாவட்டச் செயலாளர் பதவியை கு.க.செல்வம் தனக்கு கேட்டு வந்தார். ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக இளைஞர் அணியைச் சேர்ந்த சிற்றரசுவை சென்னை மாவட்டப் பொறுப்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அதிருப்தியில் தான் கு.க.செல்வம், கட்சித் தாவுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை