மானம், ரோஷம் இருக்கா? எஸ்.வி.சேகர் மீது அமைச்சர் கடும் பாய்ச்சல்..

by எஸ். எம். கணபதி, Aug 5, 2020, 13:52 PM IST

எஸ்.வி.சேகருக்கு மானம், ரோஷம் இருக்கிறதா என்று அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகக் கேட்டிருக்கிறார்.தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்க மாட்டோம், இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், பா.ஜ.க.வைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:முதலமைச்சர் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த ஆட்சி தொடருமா என்றே தெரியவில்லை. தமிழ் படிக்கக் கூடாது. இந்தி படிக்க வேண்டும் என்று சொன்னார்களா? தி.மு.க.வின் விஷயங்களை அ.தி.மு.க. ஏன் தூக்கிச் சுமக்கிறது? என்று புரியவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி ஏதாவது வந்துவிட்டதா?
பி.ஜே.பி. கூட இனி அ.தி.மு.க. இருக்கும் என்ற எண்ணமே எனக்கு கிடையாது. கந்த சஷ்டியில் இருந்து எடுத்துப் பார்த்தால், அவ்வளவு பிரஷர் கொடுத்த பிறகுதான் 2 பேர் மீது எப்.ஐ.ஆர். போட்டார். காவி உடையைப் போட்டால் காவி களங்கம் என்று சொல்கிறார். தேசியக் கொடி களங்கமா? காவியைக் கட் பண்ணிவிட்டு, வெள்ளையும், பச்சையும் கிருத்துவர்களும், முஸ்லீம்களும் இருந்தால்போதும், இந்துக்கள் வேண்டாம் என்ற முடிவுக்கு நீங்களும் வந்துவிட்டீர்களா? அ.தி.மு.க. உருப்பட வேண்டுமென்றால் ஒரே ஒரு விஷயம்தான். அ.தி.மு.க. கொடியில் உள்ள அண்ணா படத்தை எடுத்துவிட வேண்டும். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படத்தை வைத்து அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வையுங்கள். அப்போதுதான், நீங்கள் திரும்பி ஆட்சிக்கு வருவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இல்லாவிட்டால் அந்த வாய்ப்பே கிடைக்காது.

இவ்வாறு சேகர் பேசியிருக்கிறார்.

இது குறித்து, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:எஸ்.வி.சேகருக்கு அம்மா(ஜெயலலிதா)தான் மயிலாப்பூர் தொகுதியில் சீட் கொடுத்து எம்.எல்.ஏ.வாக ஆக்கினார். அதிமுக கொடியைக் கட்டிகிட்டு போய், அண்ணா பெயரைச் சொல்லி, அம்மா பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு எம்.எல்.ஏ. ஆனார். அம்மா இல்லேன்னா இவர் எம்.எல்.ஏ. ஆகியிருக்க முடியுமா?இவருக்கு உண்மையான மானம், ரோஷம் இருந்தால், அஞ்சு வருஷமா வாங்கிய எம்.எல்.ஏ. சம்பளத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். அண்ணா படம் போட்ட அதிமுக கொடியைக் கட்டி எம்.எல்.ஏ. ஆனது வெட்கமா இருக்குன்னு சொல்லி, எம்.எல்.ஏ. பென்ஷன் வேண்டாம் என்று எழுதிக் கொடுப்பாரா?

இவ்வாறு ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் எஸ்.வி.சேகர் தனது வீட்டுக்கு வாங்கி வந்த ஆவின் பால் பாக்கெட்டுகள் திரிந்து போனதாகக் குறிப்பிட்டு முதல்வருக்கு ஒரு ட்விட் போட்டிருந்தார். அப்போது ஆவின் அதிகாரிகளே நேரடியாக இவரது வீட்டுக்குப் போய் 9 பால் பாக்கெட்டுகளை கொடுத்தார்கள். இதை எஸ்.வி.சேகரே குறிப்பிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
அப்போதே சமூக ஊடகங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வந்தன. பாஜகவில் உள்ள ஒரு காமெடி நடிகருக்கே அதிமுக அரசு இந்தளவுக்குப் பயப்படுகிறது என்ற ரீதியில் அந்த மீம்ஸ்களில் முதல்வரையே கிண்டல் செய்திருந்தனர். இந்த நிலையில், முதல்வர் வரை ட்விட் போட்டு பால் பாக்கெட்டுகளை வாங்கிய அந்த நடிகர் தற்போது, அதிமுக உருப்பட வேண்டுமென்றால்... என்று முதல்வருக்கே ஆலோசனை சொல்வது அதிமுக கட்சிக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை