தமிழகத்தின் எல்லைப் பகுதியான மூணாறு நம் அனைவருக்கும் பரிட்சயமான ஒன்று. மூணாறின் ரம்மியத்தைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அடிக்கடி பெய்யும் மழை, மேகம் தவழும் மலைமுகடுகள் கொண்ட மூணாறு தமிழர்களின் வாழ்வில் கலந்த ஒன்று. மூணாற்றுக்கு நம்மில் பலரும் சென்றிருப்போம். தென்தமிழக மக்கள் பலருக்கு இங்கு இருக்கும் எஸ்டேட்டுகள் மூலம் தான் வாழ்க்கை நடந்து வருகிறது. இந்த அழகான பசுமை நிறைந்த மலைத்தொடர்கள் சமீப காலமாக சில ஆபத்துகளைச் சந்தித்து வருகிறது. அந்த ஆபத்துகளும் அந்த ஆபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தவர்கள் சந்தித்து வரும் நெருக்கடியும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலையும் தான் நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
மூணாறிலிருந்து ஐந்தே ஐந்து கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது தேவிகுளம். இந்த தேவிகுளம் தாலுகாவின் கீழ்தான் மூணாறு வருகிறது. எல்லா மலைத் தொடர்களும் சந்திக்கும் பிரச்சனையைப் போலவே, மூணாறு, தேவிகுளம் பகுதியின் தலையாய பிரச்சனையாக இருப்பது ஆக்கிரமிப்புக் கட்டடங்களும், கல்குவாரிகளும் தான். கேரளத்தில் அனுமதி அளிக்கப்பட்ட குவாரிகள் 750 மட்டும் தான். ஆனால் செயல்படுவதோ 5924 குவாரிகள். அத்தனையும் அனுமதி பெறாமல் விதிகளை மீறிச் செயல்படுகிறது. இதில் பெரும்பாலான குவாரிகள் இடுக்கி, வயநாடு, மலப்புரம் ஆகிய அதிக மலைத்தொடர் கொண்ட மாவட்டங்களில் தான் இருக்கின்றன என்கிறது ஒரு ஆய்வு. இது மாதிரியான விதிகளை மீறிய குவாரிகள், கட்டிடங்கள் மீது தேவிகுளம் பகுதி சப் கலெக்டர்களாக வருபவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் அப்படி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அடுத்த சில மாதங்களில் அங்கு இருக்கமாட்டார்கள்.
கடந்த 9 வருடங்களில் தேவிகுளம் சப் கலெக்டர் பதவியிலிருந்து டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 16. பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் ஆட்சிக்கு வந்த 2016-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்தால் இதுவரை 5 சப் கலெக்டர்கள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விதிகளை மீறிய குவாரிகள், கட்டிடங்கள்மீது நடவடிக்கை எடுத்ததற்காகவே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இரண்டு எடுத்துக்காட்டுகள்.
2018 இறுதியில் தேவிகுளம் தாலுகா சப் கலெக்டராக பொறுப்பேற்றார் ரேணு ராஜ் என்ற இளம் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி. பணிக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே மூணாறு, தேவிகுளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளைக் களையெடுத்தார். ஆக்கிரமிப்புகள் யார் செய்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளவில்லை ரேணு. பதவியேற்ற 9 மாதங்களில் 90-க்கும் அதிகமான ஆக்கிரமிப்புகளை அகற்றினார். இதில் அரசு கட்டிடங்களும் அடக்கம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் கடந்த வருடம், ஆளும் சிபிஎம் கட்சியின் இடுக்கி தொகுதி முன்னாள் எம்.பி-யான ஜாய்ஸ் ஜார்ஜ் குடும்பத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றியபோது பிரச்சனை ஆரம்பிக்கவே ரேணு இடமாற்றம் செய்யப்பட்டார்.
இதேபோல் மற்றொரு ஐஏஎஸ் அதிகாரியான ஸ்ரீராம் வெங்கட்ராமன், தேவிகுளம் பகுதி சப்-கலெக்ட்ராக இருந்தபோது ஆளும் சிபிஎம் கட்சியை எதிர்த்து, இடுக்கி மலைப்பகுதியில் இருந்த விதிகளை மீறிய கட்டிடம், லேண்ட் மாஃபியாக்களை ஒழித்தார். இதற்கு ஸ்ரீராமுக்குக் கிடைத்த சப்-கலெக்டர் பதவி பறிபோனதுதான். இதைவிடப் பெரிய கேலிக்கூத்தாக என்டிஎல் ரெட்டி எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி தேவிக்குளத்தில் ஒரு மாதம் மட்டுமே சப்-கலெக்டராக பணியாற்றியுள்ளார். இதுதான் அங்கு நடக்கும் அரசியல்.
சுற்றுலாத்தலமான மூணாறு, இடுக்கியில் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் ஈடுபவர்கள் கேரளாவை ஆளும் காங்கிரஸ், சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். தங்களுக்கு எதிராக அதிகாரிகள் செயல்படத் தொடங்கிவிட்டால் கட்சிப் பாகுபாடே இல்லாமல் அவர்களை டிரான்ஸ்பர் செய்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி என்றாலும் சரி, சி.பி.எம் ஆட்சி என்றாலும் சரி இங்கு ஆக்கிரமிப்புகள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவே மாட்டார்கள்.
இதனால் அரசியல்வாதிகளுக்கு எந்த விளைவும் ஏற்படவில்லை. அனைத்தும் சாதாரண மக்களுக்குத் தான். அதுவும், எங்கிருந்தோ வந்து மூணாறை தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் அப்பாவி பொதுமக்களுக்குத் தான். ஆக்கிரமிப்புகள் மற்றும் விதிகளை மீறிய குவாரிகளால், இந்த அழகான பசுமை நிறைந்த மலைத்தொடர்கள் கடந்த மூன்று அதிக ஆபத்துகளைச் சந்தித்து வருகிறது. கடந்த வருடம், இதே மூணாறில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு பெருவெள்ளத்தில் சிக்கி மூணாறு சிதைந்து போனது. இதிலிருந்தே இந்த மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை. அதற்குள் நேற்று அதிகாலை, அங்கு மற்றுமொரு பிரளயம். நேற்று பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேயிலை எஸ்ட்டேட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்கியிருந்த நான்கு லைன் குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்டது. இதில் இருந்த 80 தொழிலாளர்கள் நிலை என்னவென்று தெரியவில்லை. இந்த 80 பேரும் தமிழர்கள் எனச் சொல்லப்படுகிறது.
தங்கள் பேராசைக்காகக் காடுகளைத் தங்கள் இஷ்டத்துக்கு லேண்ட் மாஃபியாக்கள் ஆக்கிரமிப்பு செய்வதால் இங்கிருக்கும் பசுமையோடு மக்களின் உயிரும் ஆண்டு தோறும் பறிபோகிறது என்பது வேதனையான விஷயம்!.