பைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்..

Air india pilot preventive action minimised the loss of lives, says Hardeep Singh Puri.

by எஸ். எம். கணபதி, Aug 8, 2020, 14:53 PM IST

கோழிக்கோடு விமான நிலைய விபத்தில் பைலட் முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டதால் தான், மங்களூரு விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு நடந்த விபத்தைப் போல் இல்லாமல் பயணிகள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி தெரிவித்தார். துபாயில் இருந்து வந்த ஏர்இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்றிரவு 7.40 தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் தலைமை பைலட் கேப்டன் தீபக் வசந்த் சாத்தே, பைலட் அகிலேஷ் குமார் மற்றும் 15பயணிகள் பலியாகியுள்ளனர். கேப்டன் தீபக் சாத்தே ஏற்கனவே இந்திய விமானப் படையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பாதிக்கப்பட்ட 127 பேர் மலப்புரம் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில், கோழிக்கோடு விமான நிலையத்திற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப்சிங் புரி வந்து, விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மங்களூரு விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போல், இங்கு விமானம் தீப்பிடிக்கவில்லை. பைலட்டின் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் காரணமாகவே அது போன்ற மோசமான விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்து எதிர்பாராத ஒன்றுதான் என்று தெரிவித்தார்.
மங்களூருவில் கடந்த 2010ம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் ஏற்பட்ட விபத்தில், விமானம் தீப்பிடித்தது. அதில் 160 பேர் வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலைப்பிரதேசங்களில் அமைந்துள்ள விமான நிலையங்களை டேபிள்டாப் ஏர்போர்ட் என்று சொல்லுவார்கள். அவற்றில் ஓடுபாதைகளில் சரியாக விமானத்தைத் தரையிறக்காவிட்டால் விபத்துக்கள் ஏற்படும். அந்த வகையில், மங்களூரு விபத்து ஏற்பட்ட போது, ஏர்மார்ஷல் பி.என்.கோகலே தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஏர்மார்ஷல் பி.என்.கோகலே அளித்த அறிக்கையிலேயே இந்த விமான நிலைய ஓடுபாதைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை விமானப் போக்குவரத்துத் துறை சரியாகச் செயல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.இந்தியாவில் கேரளாவின் கோழிக்கோடு, கர்நாடகாவில் உள்ள மங்களூரு, மிசோரத்தில் உள்ள லென்புல், இமாச்சலில் உள்ள சிம்லா, குலு, சிக்கிமில் உள்ள பாக்யாங் ஆகிய விமானநிலையங்கள், டேபிள்டாப் ஏர்போர்ட்கள் ஆகும்.

You'r reading பைலட் முன்னெச்சரிக்கையால் பல பயணிகள் உயிர் பிழைப்பு.. மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை