கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை ஓட்டிய பைலட் தீபக் வசந்த் சாத்தே விமானப் படையில் பல விருதுகளைப் பெற்றவர். அவரது மறைவு விமானப்படையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா விமானம், கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்றிரவு 7.40 மணிக்குத் தரையிறங்கும் போது ஓடுபாதையில் சறுக்கி விபத்து ஏற்பட்டது. இதில் 2 பைலட் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 127 பேர் காயமடைந்தனர்.இந்த கோர விபத்தில் தலைமை பைலட் கேப்டன் தீபக் வசந்த் சாத்தே, பைலட் அகிலேஷ்குமார் மற்றும் 15 பயணிகள் பலியாகியுள்ளனர். 127 பேர் மலப்புரம் மாவட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேப்டன் தீபக் வசந்த் சாத்தே, மழையில் ஓடுபாதை சரியாக இல்லாததால் விமானத்தைத் தரையிறக்க முடியாமல் பல முறை முயற்சித்திருக்கிறார். இறுதி முயற்சியில்தான் விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.
கோழிக்கோடு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக இருந்தாலும், அதன் ஓடுபாதைகள் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்றும் இந்த விபத்து ஏற்பட்டதற்கு அதுவே முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.60 வயதான பைலட் கேப்டன் தீபக் சாத்தே அனுபவ மிக்கவர். அவர் ஏற்கனவே அம்பாலாவில் விமானப்படையின் கோல்டன் ஆரோஸ் பிரிவில் கமாண்டராக பணியாற்றியிருக்கிறார். மிக்21 போர் விமானத்தை இயக்கியவர். அதே போல், போயிங் 737, ஏர்பஸ்A3110 போன்ற விமானங்களை இயக்கிய அனுபவம் மிக்கவர்.
கடந்த 1981ம் ஆண்டில் விமானப்படையில் சேர்ந்து 2003ம் ஆண்டு வரை பணியாற்றியிருக்கிறார். முன்னதாக, தேசிய ராணுவ அகடாமியில் பயிற்சி பெறும் போதே தங்கப்பதக்கம் வென்றவர். பணியிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கிறார். கார்கில் போரின் போது விமானப்படையில் இருந்திருக்கிறார். மிகவும் திறமைசாலி எனப் பெயர் பெற்றவர் என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மும்பை போவாயில் வசித்து வந்த தீபக் சாத்தேவுக்கு 2 மகன்கள். ஒருவர் பெங்களூருவிலும், மற்றொருவர் அமெரிக்காவிலும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது.