அதிமுகவுக்கு யார் தலைமை.. அமைச்சர்கள் சண்டை ஆரம்பம்.. மீண்டும் உடைகிறதா கட்சி...

EPS will be Admk C.M. candidate in 2021 assembly election, Rajendra balaji says.

by எஸ். எம். கணபதி, Aug 11, 2020, 12:55 PM IST

அடுத்த தேர்தலில் அதிமுக வென்றால், எம்.எல்.ஏ.க்கள் கூடித்தான், முதல்வரைத் தேர்வு செய்வோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூவும், எடப்பாடியே மீண்டும் முதல்வர் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கூறியுள்ளனர். இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் அணிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது, ஓ.பன்னீர் செல்வம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றிருந்தார். சசிகலாவை அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக பொதுக் குழு தேர்வு செய்தது.

இதன்பின், ஓ.பன்னீர்செல்வம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி பதவி விலகினார்.அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூடி, சசிகலாவை முதலமைச்சராகத் தேர்வு செய்தனர். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். அவருக்கு ஆதரவாக பத்து, பன்னிரண்டு எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே சென்றனர். ஆனால், சசிகலா தலைமையில் மற்ற எம்.எல்.ஏ.க்கள் அணிவகுத்தனர். அவர்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருந்தனர். திடீர் திருப்பமாக சசிகலாவுக்குச் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. ஆனாலும், சசிகலா தனக்குப் பதிலாக எடப்பாடி பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்தார். அதைக் கூவத்தூரில் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஏற்றனர்.

இதற்குப் பின்னர், அரசியல் சூழ்நிலைகள் மாறி, ஓ.பி.எஸ். அணியும், எடப்பாடி அணியும் இணைந்தன. கட்சிக்குத் தலைமைப் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வமும், ஆட்சிக்குத் தலைமைப் பொறுப்பை எடப்பாடி பழனிசாமியும் ஏற்பதாக முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 2021ம் ஆண்டு மே மாதம் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் ஸ்டாலினே முதல்வர் வேட்பாளர் என்று அந்த கூட்டணிக் கட்சிகளே ஏற்றுக் கொண்டு விட்டன. ஆனால், அதிமுகவில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதல்வராக வருவாரா? அல்லது ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு இது வரை இருவருமே வெளிப்படையாகப் பதிலளிக்கவில்லை.இருந்த போதிலும் இருவரின் தீவிர ஆதரவாளர்களும் இப்போதே குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சரும், பாட நூல் கழக தலைவருமான வளர்மதி, முதல்வரைப் புகழ்ந்து அதிமுக கட்சி பத்திரிகையான நமது அம்மாவில் கவிதை எழுதியிருந்தார்.

அதில், காலம் முழுவதும் நீயே நிரந்தர முதல்வராகி... என்று எடப்பாடிதான் மீண்டும் முதல்வர் எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த சூழலில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று(ஆக.10) மதுரை பரவையில் பேட்டி அளித்தார். அப்போது அவர், அதிமுக கொள்கைகளின்படி, தேர்தலில் வென்றதும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடித்தான் தலைவரை, முதல்வரைத் தேர்வு செய்வார்கள் என்று பதிலளித்தார். அதாவது, எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் இல்லை என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று ஒரு ட்விட் போட்டிருக்கிறார். அதில் அவர், எடப்பாடியார் என்றும் முதல்வர்! இலக்கை நிர்ணயித்து விட்டு களத்தைச் சந்திப்போம்! எடப்பாடியாரை முன்னிருத்தி தளம் அமைப்போம்! களம் காண்போம்! வெற்றி கொள்வோம்! 2021-ம் நமதே! என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி, தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லியிருக்கிறார். எனவே, அமைச்சர்களுக்கு இடையே கட்சித்தலைமை யார் என்பதில், பல கருத்து வேறுபாடுகள் இருப்பது தெளிவாகிறது.இது பற்றி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் கேட்டோம். அவர் கூறுகையில், பாஜக மேலிடத்தின் கட்டாயத்தால்தான், சசிகலா குடும்பத்தை ஓரம்கட்டி விட்டு, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தன. அப்போது ஓ.பி.எஸ். தனக்கு முதல்வர் பதவி வேண்டுமென்று கேட்டார். தன்னையே ஜெயலலிதா 2 முறை முதல்வராக ஆக்கியதைக் குறிப்பிட்டு, அவர் அதில் தீவிரமாக இருந்தார். கடைசியில், அவரை கட்சிக்குத் தலைமை ஏற்கவும், ஆட்சிக்கு எடப்பாடி தலைமை ஏற்கவும் செய்து உடன்பாடு எட்டியது.

ஆனால், அதற்குப் பின்னால் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் யாருக்குமே எந்த பலனும் கிடைக்கவில்லை. அவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். பல முறை உட்கட்சிப் பூசல் வெடித்து கே.பி.முனுசாமி போன்ற சிலர் அரசாங்கத்தில் பல வேலைகளைச் சாதித்துக் கொண்டனர். மற்றவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.மேலும், எடப்பாடி ஆட்சியில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், குரூப்1 அதிகாரிகள் முக்கியப் பதவிகளைப் பிடித்தனர். குறிப்பாக, கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக பலன் கிடைத்தது. அதே சமயம், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, குறிப்பாகத் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரங்கள் பறிபோனது. இதனால்தான், அடுத்த முதல்வராக ஓ.பி.எஸ்சை கொண்டு வர வேண்டுமென ஒரு சாராரும், எடப்பாடியே தொடர வேண்டுமென இன்னொரு சாராரும் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இதில் மீண்டும் அணிகள் உடைந்தால், அதை பாஜக தனது அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். தேர்தலில் திமுகவுக்குக் கூடுதல் வாய்ப்பையும் பெற்றுத் தரும் என்று தெரிவித்தார்.

You'r reading அதிமுகவுக்கு யார் தலைமை.. அமைச்சர்கள் சண்டை ஆரம்பம்.. மீண்டும் உடைகிறதா கட்சி... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை