தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ளது. இந்நோய்க்கு இது வரை 5278 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. மாநிலம் முழுவதும் நேற்று (ஆக.12) ஒரே நாளில் 5871 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 27 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 14,520 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.
இதில் சிகிச்சை முடிந்து நேற்று வீடு திரும்பிய 5633 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 56,313 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 119 பேர் மரணம் அடைந்தனர். இதையடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 5278 ஆக உயர்ந்தது. தற்போது 52,929 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பரவி வருகிறது. தினமும் புதிதாக 300 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்படுகிறது.
சென்னையில் நேற்று 993 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் மொத்தம் ஒரு லட்சத்து 12,059 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
செங்கல்பட்டில் நேற்று 439 பேருக்கும், காஞ்சிபுரம் 371, திருவள்ளூர் மாவட்டத்தில் 407 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று வரை 19,125 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 18,096 ஆக உயர்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இது வரை 10,629 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 9626 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், மதுரை, கோவை, கடலூர், வேலூர், சேலம், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும் நோய் பரவுவது முழுமையாகக் கட்டுப்படவில்லை.