அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை இப்போதே தொடங்கியுள்ளது. இதற்கு வித்திட்டவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ''எடப்பாடியார் என்றும் முதல்வர்!
இலக்கை நிர்ணயித்துவிட்டு
களத்தைச் சந்திப்போம்!
எடப்பாடியாரை முன்னிருத்தி
தளம் அமைப்போம்!
களம் காண்போம்!
வெற்றி கொள்வோம்!
2021-ம் நமதே!'' என்று அவர் போட்ட டுவீட் ஒட்டுமொத்த கலகத்துக்கும் காரணமாக அமைந்துள்ளது. இதன் பின் ஒருசில அமைச்சர்கள் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்க மறுக்க, அமைச்சர் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு வலு சேர்த்தார்.
அதேநேரம் ஜெயக்குமாரோ, '' தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு செய்யப்படும்" என்றார். இந்நிலையில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஆன ஓ. பன்னீர் செல்வம், "தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவது ஒன்றே அ.இ.அ.தி.மு.கவின் இலக்கு. அதுவே மாண்புமிகு அம்மா அவர்களின் கனவு. அதனை நனவாக்கக் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் அனைவரும் பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பது எனது அன்பு வேண்டுகோள்!. தாய்வழி வந்த
தங்கங்கள் எல்லாம்
ஓர்வழி நின்று
நேர்வழி சென்றால்
நாளை நமதே!" என்று டுவிட் செய்துள்ளார்.