இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான இறுதி விசாரணை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள, அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையைப் பெற எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணியினரும், டிடிவி தினகரன் அணியினரும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக இரு அணிகளும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் முடிவு செய்யவேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் அண்மையில் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், அதிமுக அணியினர் செப்ட ம்பர் 29-ஆம் தேதிக்குள் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து அக்டோபர் 6-ஆம் தேதி விசாரணை துவங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
பின்னர், விசாரணையை அக்டோபர் 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய நாளில் டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா ஆஜராகாதால், விசாரணை 16-ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து திங்கட்கிழமையன்று விசாரணை நடைபெற்றது. எடப்பாடி - ஓபிஎஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஸ்வநாதன், குரு கிருஷ்ணகுமார், சி.எஸ்.வைத்தியநாதன் உள்ளிட்டோர் ஆஜராகினர். டி.டி.வி.தினகரன் அணி சார்பில் வழக்கறிஞரும், முன்னாள் அமைச்சருமான அஸ்வினிகுமார் வாதாடினார்.
டிடிவி தினகரன் தரப்பில் புதிய மனு ஒன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “எதிரணியினர் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் பல போலியானவை என்று ஏற்கெனவே நாங்கள் தெரிவித்து இருக்கிறோம்; அவர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் 6 பேரின் கையெழுத்துக்கள் பொருந்தவில்லை. அதனை நிரூபிக்க தயாராக இருக்கிறோம்; எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும். செப்டம்பர் 29-ஆம் தேதிக்கு பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை ஏற்கக்கூடாது” என்று கோரிக்கை விடப்பட்டது.
அதை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. சாட்சிகள், சட்டத்தின் படி பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டபோது, பிரமாணப் பத்திரங்களை சரிபார்ப்பது என்பது எங்களின் பணி அல்ல என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.
திமுக, காங்கிரஸ் உடன் சேர்ந்து டிடிவி தினகரன் தரப்பினர் இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சிக்கின்றனர் என்று எடப்பாடி - ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டினர். இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்புதான் அவ்வாறு இரட்டை இலை சின்னத்தை முடக்கும் வகையில் செயல்படுகின்றனர் என்று டிடிவி தினகரன் தரப்பினர் கூறினர்.
மேலும், பிரமாணப் பத்திரத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்த பின்னரே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, இறுதி விசாரணையை அக்டோபர் 23-ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.