தியாகிகள் ஓய்வூதியம் ரூ17 ஆயிரமாக உயர்வு.. சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Aug 15, 2020, 13:25 PM IST

சுதந்திரத் போராட்ட தியாகிகளுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு 74வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைச் செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதன்பின், சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:கொரோனா காலத்தில் மக்களுக்காகக் களப் பணியாற்றிய அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.6650 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத், சமுத்திரசேது திட்டத்தின் கீழ் 64,661 பேர் தமிழகம் திரும்பி வந்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டதால், உரியக் காலத்தில் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தூர்வாரும் பணிகள் முன்கூட்டியே நடந்து முடிந்துள்ளதால், கடைமடைப் பகுதிகளுக்கு வழக்கத்தை விட 10 நாட்களுக்கு முன்பாக தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், குறுவைப் பாசனத்திற்கு உதவியாக உள்ளது. மேலும், ரூ.1432 கோடி செலவில் 6278 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


More Tamilnadu News

அதிகம் படித்தவை