ஒரு சில படங்கள் சமுதாயத்தில் புதிய தாக்கங்கள் ஏற்படுத்துவதுண்டு. தற்போது ஒரு படம் குற்றவாளி என்று கைது செய்யப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியைப் பத்ம பூஷண் பெறும்வரை உயர்த்தி இருக்கிறது.அலைபாயுதே தொடங்கி ரன், விக்ரம் வேதா உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்திருக்கும் மாதவன் முதன்முறையாக இயக்குனர் ஆகி இருப்பதுடன் பிரதான வேடத்தில் நடிக்கிறார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ஃட் பெயரில் இப்படம் உருவாகிறது. நம்பி நாராயணன் வேடத்தை மாதவன் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் உள்ளது. இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் குழுவினர், ரசிகர்கள் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புகாக காத்திருக்கின்றனர்.
மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் இப்படம் ஏற்கனவே சொன்னது போல இது உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ஒரு வாழ்க்கை சரித்திர படமாகும்.
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது குற்றம் சாட்டப்பட்ட 1994 உளவு வழக்கை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தை மாதவன் அறிவித்ததிலிருந்து விஞ்ஞானியின் வாழ்க்கையில் எதிர்பார்க்காத மாற்றங்கள் நடந்து வருகின்றன. இஸ்ரோவில் கிரையோஜெனிக்ஸ் துறையின் பொறுப்பாளராக இருந்த நம்பி நாராயணன், இந்திய விண்வெளி தொழில் நுட்பம் தொடர்பான சில முக்கிய ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அதனடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நம்பி சிறையில் அடைக்கப்பட்டார். 1998ம் ஆண்டு சிபிஐ அவரை குற்றச் சாட்டுகளிலிருந்து விடுவித்தது. இருப்பினும், இந்த வழக்கில் தவறாக அவரை இணைத்ததற்காக சட்டப் போர் நடத்தினார் நம்பி. 2017 ஆம் ஆண்டில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்ட படத்தை மாதவன் அறிவித்த போது, நம்பி நாராயணன் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.
சமீபத்தில், இரண்டரை சகாப்த கால உளவு வழக்கைத் தீர்ப்பதற்காக கேரள அரசு, நாராயணனுக்கு 1.30 கோடி கூடுதல் இழப்பீடு வழங்கப்பட்டது, 2018 ஆம் ஆண்டில், நம்பி கைது செய்யப்படுவது தேவையற்றது என்று உச்ச நீதிமன்றம் கூறியதுடன், அவருக்கு 50 லட்சம் இடைக் கால நிவாரணம் வழங்கியது. பின்னர் நம்பிக்கு 2019 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது. இந்த தகவல்கள் எல்லாமே வெளிப்படையாக ஊடகங்களில் கிடைக்கக்கூடிய உண்மைகள், ஆனால் இன்னும் அம்பலத்துக்கு வராத விஷயங்கள் பல உள்ளன. அவை எல்லாம் மாதவன் இயக்கும் படத்தில் இடம் பெற உள்ளது. அவையெல்லாமே இந்த சம்பவங்கள் பற்றி ஆராய்ந்தபோது கிடைத்த வெளிவராத உண்மைகள்இப்படத்தில் மாதவன் தனது 27 வயது முதல் 75 வயது வரையிலான நாராயணன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில் சிம்ரன் அவரது மனைவி மீராவாக நடிக்கிறார். சூர்யா மற்றும் ஷாருக்கான் தமிழில் கவுர வேடங்களில் நடிக்கவுள்ளனர், சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்தி மற்றும் ஆங்கில பதிப்புகளிலும் இப்படம் வெளியாகிறது.