மூணாறு பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் எஸ்ட்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த 22 குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது. அதிலிருந்த 83 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. இந்த 80 பேரும் தமிழர்கள். ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், கயத்தாறு, தென்காசியைச் சேர்ந்தவர்கள் தான் இந்த 83 பேரும். இவர்களில் 42 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணி முடிய இன்னும் ஒருவார காலம் ஆகும் எனத்தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே, பெட்டி முடியில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் குவி என்ற பெயர் கொண்ட, ஒரு நாய் பல நாட்களாகத் தேடி வருகிறது. ஒவ்வொரு உடலையும் தூக்கி வரும்போதும் அதைப் பார்க்கச் செல்கிறது. அங்குள்ளவர்களுக்கு பரிட்சியமான அந்த நாய் தொடர்பாக விசாரிக்கையில், நாய் தனது எஜமானரைத் தேடி அலைவது தெரியவந்தது. நாய் வளர்த்த தொழிலாளியின் குடும்பமே மண்ணுக்குள் புதைந்துவிட்டது. பேரிடரில் இருந்து தப்பித்த இந்த நாய் தன்னுடைய எஜமானர் இந்த மண்ணின் கீழ் எங்காவது இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முழு பேரழிவு பகுதியையும் அலசி வருகிறது.
இந்நிலையில், குவி நேற்று ஆற்றின் அடியில் இருந்து எதையோ இழுத்துக்கொண்டிருக்க, அதை பார்த்த மீட்புப்படையினர் அருகில் சென்று பார்த்தனர். நாய் இழுத்துக்கொண்டிருந்தது 2 வயதுக் குழந்தை தனுஸ்கா என்பதும், நாயை வளர்த்த எஜமானரின் குழந்தை என்பதும் தெரியவந்தது. உடனடியாக தனுஸ்காவின் உடலை மீட்புப் படையினர் மீட்டனர். நாயின் எஜமானர் குடும்பத்தில் தனுஸ்காவின் 51 வயது பாட்டி மட்டுமே உயிருடன் இருக்கிறார். மற்ற எல்லோரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.