சென்னையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதற்கு அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.தமிழகத்தில் சீன வைரஸ் நோயான கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பல தளர்வுகள் அமலுக்கு வந்து விட்டாலும், ஷாப்பிங்மால், சினிமாதியேட்டர்கள், கோயில்கள், பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. 5 மாதங்களுக்கு மேலாகியும் மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை.
மாநிலம் முழுவதும் நேற்று(ஆக.15) 5860 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 30 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 32,105 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.இதில், மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 5236 பேரையும் சேர்த்தால், இது வரை 2 லட்சத்து 72,251 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப்பாதிப்பால் நேற்று பலியான 127 பேரையும் சேர்த்தால் 5641 பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 54,217 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இது வரை தமிழகத்தில் 35 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 69,598 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் அரசு அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
சென்னையில் கடந்த சில வாரங்களாகப் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வந்தது. கடந்த 4 நாட்களாக மீண்டும் அது ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. நேற்று முன் தினம் சென்னையில் 1187 பேருக்கும், நேற்று 1179 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் இது வரை மொத்தம் ஒரு லட்சத்து 15,444 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.
சென்னைக்கு அடுத்து செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, கடலூர் மாவட்டங்களில் நேற்று மட்டும் சுமார் 300 பேர் வரை கொரோனா பாதிப்பு அறியப்பட்டது. செங்கல்பட்டில் நேற்று 336 பேருக்கும், திருவள்ளூர் 422, காஞ்சிபுரம் 184, கோவை 290, கடலூர் மாவட்டத்தில் 339 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இது வரை 20,465 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 19,382 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13,576 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இது தவிர, பல மாவட்டங்களில் புதிதாக நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
அதே சமயம், மிகவேகமாகத் தொற்று பரவிய மதுரை மாவட்டத்தில் தற்போது புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தினமும் 300 பேர் வரை தொற்று பரவி வந்த நிலையில், அது படிப்படியாகக் குறைந்து நேற்று புதிதாக 90 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது. இந்த மாவட்டத்தில் இது வரை 13,576 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.