தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு மலைப்பகுதியில் தங்கியிருந்த ரவுடி துரைமுத்துவை கைது செய்ய, ஸ்ரீ வைகுண்டம் டிஎஸ்பி தலைமையிலான 5 பேர் கொண்ட காவலர் குழு மலைப்பகுதிக்குச் சென்றது.அங்குத் தனது சகாக்களுடன் பதுங்கியிருந்த துரைமுத்து போலீஸை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். காவலர்கள் அவர்களைப் பின்தொடர்ந்த போது ரவுடி துரை முத்து முதலில் ஒரு நாட்டு வெடிகுண்டை எடுத்து வீசியுள்ளார். அது வெடித்த போது எதுவும் ஏற்படாத நிலையில் இரண்டாவதாக வீசிய நாட்டு வெடிகுண்டு காவலர் சுப்ரமணியன் தலையில் விழுந்துள்ளது. இதில் சுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் நேற்று தமிழகத்தால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்துக்குக் காரணமான ரவுடி துரைமுத்துவும் வெடி குண்டு வீச்சினால் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தார். இந்நிலையில், இன்று காவலர் சுப்ரமணியனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நடந்தது. இறுதிச்சடங்கில் பங்கேற்கத் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, டிஜிபி திரிபாதி, தென் மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவின் குமார் அபினவ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன் உட்பட ஏராளமான காவலர்கள் வந்திருந்தார்கள்.அப்போது, காவலர் சுப்ரமணியனின் உடலைப் பார்த்து உறவினர்கள் அழுத காட்சி அங்கிருந்தவர்களைச் சோகத்தில் மூழ்கடித்து. பின்னர் கலெக்டர் உட்பட அதிகாரிகள் பலரும் சுப்ரமணியனின் உடலுக்கு மலர் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். இதன் பின் தமிழகக் காவல்துறை சார்பில் சுப்ரமணியனுக்கு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.
அடக்கம் செய்யும்போது, காவலர் சுப்பிரமணியனின் உடலை டிஜிபி திரிபாதி, தென் மண்டல ஐஜி முருகன், டிஐஜி பிரவின் குமார் அபினவ், தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், திருநெல்வேலி எஸ்பி மணிவண்ணன் ஆகியோர் தோலில் சுமந்தபடி எடுத்துச் சென்று நெகிழ வைத்தனர்.உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் 2017ஆம் ஆண்டுதான் காவல்துறையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவரின் சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட பண்டாரவிளை கிராமம் தான். பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தான் தனிப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.