முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தென்மாநில சுற்றுப்பயணத்தின்போது மதுரை மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் முதல்வரிடம் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அமைச்சர் ஆர்பி உதயகுமாரோ தனது பேட்டியில், ``மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் அதிக வளர்ச்சியை கொடுக்கும். தென் மாநிலங்கள் வேகமாக வளரும். தென்னகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் மக்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்" என பேசினார்.
உதயகுமாரின் கோரிக்கைக்கு, செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா என தென் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தோள் கொடுக்க கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் திருச்சி அமைச்சரான சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனோ, ``திருச்சியை இரண்டாவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்பது எம்ஜிஆரின் நீண்ட நாள் கனவு. தேசிய அளவிலான ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம், தடையில்லாத குடிநீர், மத்திய, மாநில அரசு நடத்தும் தொழிற்சாலைகள் என அனைத்தும் கொண்ட மாவட்டம் திருச்சி. சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது துணை நகரமாக உருவாக்குவதற்கு ஏற்றது திருச்சி என்று மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் ஆசை கொண்டிருந்தார். எனவே, தற்போது திருச்சி இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க முதல்வர் துணை முதல்வர் முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இப்படி ஆளாளுக்கு தங்கள் மாவட்டத்தை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என போர்க்கொடி தூங்கியதால், அதிமுகவுக்குள் சலசலப்பு எழுந்தது. இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமியோ, ``2ம் தலைநகர் கருத்து அரசின் கருத்தல்ல; அவரவர் கருத்து" என்று அதிரடியாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.