இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, நேற்று இரவு திடீரென உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 95 வயதாகும் நல்லகண்ணுவுக்கு கடந்த சில நாள்களாக சளி மற்றும் காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தான், நேற்று இரவு அவருக்கு திடீரென அதிகமான மூச்சுத்திணறல் ஏற்படவே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருக்கும் கொரோனா பயம் காரணமாகவும், கொரோனாவுக்கான அறிகுறிகள் இருந்ததாலும், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தநிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``நல்லகண்ணு அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை'' என்று கூறியிருக்கிறார். இது சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
நல்லகண்ணுவின் மகள் ஆண்டாள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவருகிறார். தற்போது, தந்தைக்குத் துணையாக ராஜீவ் காந்தி மருத்துவமனையியல் இருக்கிறார். அதேநேரம் மருத்துவர்களைத் தவிர உறவினர்கள், தோழர்கள் என வேறு யாரும் சந்திக்க அவரை சந்திக்க அனுமதி வழங்கவில்லை.
நல்லகண்ணு உடல்நலன் தொடர்பாக பேசிய மருத்துவர்கள், ``மூச்சுத்திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்பட்டது. தற்போது அவர்உடல்நிலை சீராக இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.