மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தியார் அணையை சீரமைக்க வேண்டும் என்று 15 கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ளது சாத்தியார் அணை. இந்த அணையின் உயரம் 29 அடியாகும். வகுத்து மலை, செம்பூத்துகரடு, சிறுமலை தொடர்ச்சி மற்றும் மஞ்சமலையால் சூழப்பட்டுள்ள இந்த அணையால் சுற்றியுள்ள பல கிராமங்களில் பாசன வசதி பெற்று வந்தது.
கடைசியாக, கஜா புயலின் போது. கடந்த 2018 நவம்பர் 16ம் தேதி ஒரே நாளில் 60 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால், சுமார் 10 வருடங்களுக்குப் பின்பு, அணையில் 26 அடிவரை நீர் நிரம்பியது. அதன்பிறகு, தண்ணீர் குறைந்து கொண்டே போய் அணையே வறண்டு போனது.அணையை முறையாகப் பராமரிக்காததாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளைப் பாதுகாக்கத் தவறியதாலும் இந்த அணை பயன்பாடற்று போய்க் கொண்டிருக்கிறது. இதனால், அணைக்கு உட்பட்ட கீழசின்னம்பட்டி, எர்ரம்பட்டி, அய்யூர், சுக்காம் பட்டி, ஆதனூர் உள்பட 15 கிராம கண்மாய் பாசன விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொதுப்பணித் துறையினர் இந்த அணையைச் சீரமைக்கச் சிறந்த திட்டம் தீட்டிச் செயல்படுத்த வேண்டும். அதற்கு அரசு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயி தரணி கூறுகையில், அணையைச் சீரமைத்தால் சுற்றியுள்ள ஏராளமான கிராம மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.