முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.. முரளிதர்ராவுடன் சந்திப்பு..

Former IPS officer Annamalai joins BJP in Delhi.

by எஸ். எம். கணபதி, Aug 25, 2020, 14:35 PM IST

முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, இன்று பாஜகவில் சேர்ந்தார்.
ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பாஜக பொதுச் செயலாளர் முரளிதர்ராவை சந்தித்து, அந்த கட்சியில் இணைந்தார். அப்போது மாநில பாஜக தலைவர் எல்.முருகன் உடனிருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை குப்புசாமி, கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். உடுப்பி, சிக்மகளூர் மாவட்டங்களில் அவர் எஸ்.பி.யாக பணியாற்றினார். அந்த மாவட்டங்களில் இருந்து அவர் பணிமாற்றம் செய்யப்படும் போதெல்லாம் மாவட்ட மக்கள் அவருக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர்.

இந்நிலையில், அண்ணாமலை கடந்த ஆண்டு மே மாதம் திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவர் தமிழக அரசியலில் ஈடுபடத் திட்டம் போட்டிருக்கிறார் என்று அப்போதே கூறப்பட்டது. ஆனால், அப்போது அவர் வாய் திறக்கவில்லை. எனினும், கர்நாடக உள்துறை செயலாளர் ரூபா கூறுகையில், அண்ணாமலைக்கு அரசியலில் குதிக்கும் ஆசை உள்ளது. அவரை போன்ற இளைஞர்கள் அரசியலில் நுழைவது வரவேற்கத்தக்கது. அவரை வாழ்த்துகிறேன் என்றார். அதற்குப் பிறகு, அண்ணாமலை எந்த முடிவும் தெரிவிக்காமல் இருந்தார். அவருக்குச் சரியான வாய்ப்பு கிடைக்காததாலோ, திடீரென தற்சார்பு விவசாயத்தில் களமிறங்க உள்ளதாகப் பேட்டி அளித்தார்.

பின்னர், அரசியல் ரீதியாக சில பேட்டிகளையும் அளித்திருந்தார். ரஜினிகாந்த்துக்கு ஆதரவாக அவர் பேசியதால், ரஜினி தொடங்கவுள்ள கட்சியில் அவர் இணையப் போவதாகவும், அவர்தான் ரஜினியின் முதல்வர் வேட்பாளர் என்றும் பேசப்பட்டது.
ஆனால், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்பதே இன்னும் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. இந்த சூழலில்தான், அண்ணாமலை பாஜகவுக்குப் போயிருக்கிறார். அவரிடம் ஏன் பாஜகவில் சேர்ந்தீர்கள் என்று கேட்ட போது, “நான் நாட்டின் மீது அக்கறை கொண்டவன். நாடு, தேசம் என நினைக்கக் கூடியவன். அதனால்தான் ஐ.பி.எஸ் ஆனேன். தமிழகத்தில் தற்போது ஒரு மாற்றுப்பாதை தேவைப்படுகிறது என்பது என் கருத்து. அதனை பாஜகவால் மட்டுமே கொடுக்க முடியும் என நினைக்கிறேன்” என்று பதில் தெரிவித்துள்ளார்.

You'r reading முன்னாள் ஐ.பி.எஸ். அண்ணாமலை பாஜகவில் சேர்ந்தார்.. முரளிதர்ராவுடன் சந்திப்பு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை