முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78சென்னை ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் வசித்து வந்தார். நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், உடனடியாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது உடல் தேவகோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. ஏ.ஆர்.லட்சுமணனின் மனைவி மீனாட்சி சில நாட்களுக்கு முன்புதான் மரணமடைந்தார்.
ஏ.ஆர்.எல். அழைக்கப்படும் நீதிபதி லட்சுமணன், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றிய போது, பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் தீர்ப்பை வழங்கினார். சட்ட ஆணையத்தின் தலைவர், முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் குழு உறுப்பினர் உள்படப் பல முக்கிய பதவிகளிலும் பணியாற்றியுள்ளார். இவருக்கு ஏ.ஆர்.எல்.அருணாச்சலம், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் என்று 2 மகன்களும் உமையாள், சொர்ண வள்ளி என 2 மகள்களும் உள்ளனர். ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞராகவும், சென்னை பார் அசோசியேஷன் தலைவராகவும் உள்ளார்.
ஏ.ஆர்.லட்சுமணன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் நீதியரசர் ஏ.ஆர் லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவர் தனது திறமையான வாதத்தால் பல வழக்குகளில் வெற்றி கண்ட பெருமைக்குரியவர். சென்னை ஐகோர்ட் நீதிபதியாகவும், கேரள ஐகோர்ட் நீதிபதியாகவும், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், ஆந்திரப் பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும், சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகவும் திறம்பட பணியாற்றியவர். பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர் என்ற பெருமைக்குரியவர். குறிப்பாக, பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை விதித்துத் தீர்ப்பு அளித்தவர். அவர் பல நூல்களையும் எழுதிய பெருமைக்குரியவர். அவரது மறைவு தமிழ்நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நீதித்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், நகரத்தார் அதிகம் வாழும் தேவகோட்டையிலிருந்து டெல்லி செங்கோட்டை வரை சென்று– உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி-பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய, முன்னாள் நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்குத் திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான, சென்னையில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைய வேண்டும் என்பதற்கு ஆதரவாக, "229 சட்ட ஆணைய அறிக்கையை” அளித்து- மத்திய அரசுக்குப் பரிந்துரை வழங்கியவர். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவில் தமிழகத்தின் சார்பில் இடம்பெற்று, தமிழ்நாட்டின் நதி நீர் உரிமைகளை நிலை நாட்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.