அரசியலில் ஒரு 'பகுதிநேர அரசியல்வாதி' என்ற முறையை கண்டுபிடித்த ஒரே ஆன்மீக ஞானி ரஜினிதான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து சந்திரபாபு நாயுடு அதிருப்தி தெரிவித்ததை நமது மாநிலத்தோடு ஒப்பிட முடியாது. நிதி தன்னாட்சியை பேணிக்காக்கும் வகையில் நாம் தொடர்ந்து குரல் கொடுக்கிறோம்.
வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து வரும் நிதி நமக்கு குறைந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. போராடக்கூட தயங்க மாட்டோம்.
மு.க.ஸ்டாலின் அடிக்கடி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்று மிகைப்படுத்தி பேசுகிறார். முதலில் செஞ்சிக்கோட்டை ஏறுகிறாரா என்று பார்ப்போம். அதன் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வரட்டும். செயல் தலைவரான மு.க.ஸ்டாலின் அபரிமிதமான கற்பனை கவிஞர் ஆகிவிட்டார்.
நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலில் ஈடுபட்டுள்ளதால் அரசியல் கேள்விகளுக்கு பதில் சொல்வதை தவிர்ப்பதாக கூறுகிறார். உலகத்தில் அரசியல்வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆன்மீக வாதிகளை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், அரசியலில் ஒரு ‘பகுதிநேர அரசியல்வாதி’ என்ற முறையை கண்டுபிடித்த ஒரே ஆன்மீக ஞானி ரஜினிதான்” என்று தெரிவித்துள்ளார்.