அரியர் பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா?!

by Sasitharan, Aug 27, 2020, 19:40 PM IST

கொரோனா சூழல் காரணமாக கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்போழுது மீண்டும் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்கு கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை உயர்கல்வி அமைச்சர் அன்பழகனும் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆனால் அரசால் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட முடியாது எனக் கூறுகிறார் சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி. இதுதொடர்பாக அவர், ``தமிழக அரசின் அறிவிப்பு விசித்திரமானது. பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அதிகாரமிக்க அமைப்புகளாகும். சிண்டிகேட், செனட், கல்விக்குழு என அதிகாரமிக்க அமைப்புகளின் வழிகாட்டுதல்படி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்திதான் மாணவர்களை வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியும். ஆனால் தேர்வுகளை ரத்து செய்து அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதோ, பல்கலைக்கழகங்களின் கல்விக் கொள்கையில் தலையிடுவதற்கோ மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

தேர்ச்சி பெற முடியாமல் போன பாடங்களுக்கு தேர்வெழுதத்தான் மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். ஆனால் தேர்வெழுதாமலே அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பது முற்றிலும் மாறுபட்டது. இப்படியான அறிவிப்பால் பல்கலைக்கழகங்களின் கல்வித்தரம் முற்றிலும் பாதிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்த விவகாரத்தில் உறுதியான முடிவை எடுக்க வேண்டும்'' எனக் கூறியுள்ளார். இதனால் அரசின் அறிவிப்பில் புதிய சிக்கல் எழுந்துள்ளன.

Get your business listed on our directory >>More Tamilnadu News

அதிகம் படித்தவை